தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் நீடித்து வரும் நிலையில், ஆங்காங்கே லேசான மழையும் பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று (அக்டோபர் 30) மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் தெற்கு கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அதே இடங்களில் நீடித்து வருகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 31ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகள், அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
இதனைத் தொடர்ந்து, அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வங்கக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (அக்டோபர் 30) மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்!
இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட பகுதிகளிலும், தெற்கு கடலோர தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
இதர தமிழ்நாடு மாவட்டங்களில் பொதுவாக வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கான வாய்ப்பு குறைவாகவே காணப்படுகிறது.
அக்டோபர் 31: கடலோர மாவட்டங்களில் லேசான மழை!
நாளை (அக்டோபர் 31) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதர தமிழ்நாடு பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலையில் மாற்றம் இருக்குமா?
அக்டோபர் 30 முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை.
இன்று மற்றும் நாளை (அக்டோபர் 30, 31) சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். நவம்பர் 1 முதல் 3ஆம் தேதி வரையிலான நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பான அளவிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் வானிலை எப்படி இருக்கும்?
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று (அக்டோபர் 30) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இருப்பினும், பொதுவாக வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை – கடலில் பலத்த காற்று வீசக்கூடும்!
வங்கக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அக்டோபர் 30: அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு, மத்திய மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
அக்டோபர் 31: தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
மேலும், அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் இதர பகுதிகள், அதனை ஒட்டிய மத்திய கிழக்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.
எனவே, மேற்கண்ட கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லும்போது வானிலை முன்னறிவிப்புகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

