
ஆலய உலா..! – வி.ராம்ஜி
கொங்கு தேசத்தில் எத்தனையோ சிவாலயங்கள் இருக்கின்றன. சோழர்களாலும் பாண்டிய மன்னர்களாலும் கட்டப்பட்ட பல ஸ்தலங்கள் இன்றைக்கும் புராதனப் பெருமைகளை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. கொங்கு தேசத்தின் முதல் சிவாலயம் எனும் பெருமை மிக்க கோயிலாகத் திகழ்கிறது அவிநாசி. அதுமட்டுமா? காசிக்கு நிகரான அவிநாசி என்கிற பெருமையும் கொண்ட கோயில் என்கிறது ஸ்தல புராணம்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ளது அவிநாசி. இங்கே உள்ள கோயிலில் குடிகொண்டிருக்கும் இறைவனின் திருநாமம் அவிநாசியப்பர். அம்பாளின் திருநாமம் ஸ்ரீகருணாம்பிகை. பிரமாண்டமான திருக்கோயிலாகத் திகழ்கிறது அவிநாசிக் கோயில். தலம், தீர்த்தம்,மூர்த்தம் என்பார்கள். இந்த மூன்றிலும் உன்னத ஆலயமாக அவிநாசி திருத்தலம் அமைந்திருக்கிறது.
சோழதேசத்திலும் பாண்டிய நாட்டிலும் ஏராளமான கோயில்கள் அமைந்திருக்கின்றன. சேரர்கள் ஆட்சிக்கு உட்பட்ட கொங்குப்பகுதியில் பிரமாண்டமான கட்டுமானங்கள் கொண்ட கோயில் நிறைய இல்லை என்று சரித்திர ஆய்வாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும் அவிநாசிக் கோயில், கொங்கு தேசத்தின் பிரமாண்டக் கோயில் என்று குறிப்புகளைக் கொண்டு ஆராய்ந்திருக்கிறார்கள்.
இங்கே அவிநாசியப்பர் அருளும் பொருளும் அள்ளித்தருகிறவர் என்று கொண்டாடப்படுகிறார். ஞானமும் யோகமும் தந்து மோட்சத்தைக் கொடுப்பார் என்று ஸ்தல புராணம் விவரிக்கிறது. ஆனாலும் சிவத்தை விட சக்தியே இங்கு சக்திமிக்கவள் என்று கருணாம்பிகையைச் சொல்லி வியக்கிறது ஸ்தல புராணம்.
தேள் முதலான விஷ ஜந்துக்களால் பாதிக்கப்பட்டவர்களும் அவற்றால் பாதிக்கப்படாமலும் இருக்கவும் அவிநாசி ஆலயத்துக்கு வந்து அம்பாளை வேண்டிச் செல்கிறார்கள் பக்தர்கள். அம்பாளின் சந்நிதிக்குப் பின்னேயுள்ள கோஷ்டச் சுவரில் கற்பாறையில் தேள் வடிவம் வடிக்கப்பட்டிருக்கிறது. இது வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத அதிசயம், அபூர்வம், ஆச்சரியம் என்கின்றனர் பக்தர்கள்.
ராகுவைப் போல் கொடுப்பாரில்லை; கேதுவைப் போல் கெடுப்பாரில்லை என்று ஜோதிட சாஸ்திர நூல்கள் தெரிவிக்கின்றன. ராகுவாலும் கேதுவாலும் ஏற்பட்ட தோஷங்களைப் போக்கியருளக்கூடிய கோயில் என்று அவிநாசியைக் கொண்டாடி வணங்குகிற புண்ணிய திருத்தலம் என்பது கூடுதல் பெருமை.
அதுமட்டுமா?
கருணாம்பிகை அம்மையை வணங்கிவிட்டு, அப்படியே கோஷ்டத்தில் வலம் வரும்போது, தேள் வடிவத்தையும் வணங்குகிறார்கள் பக்தர்கள். விஷ ஜந்துக்களால் நோய் ஏற்படாமல் காப்பாள். இந்தப் பிறவியிலோ முந்தைய பிறவிகளிலோ நம்மையும் அறியாமல், தேள், பாம்பு, எறும்பு முதலான ஜந்துக்களை, பூச்சிகளைக் கொன்ற பாவமெல்லாம் விலக்கிக் காத்தருளுவாள் கருணாம்பிகை.
இன்னொரு புராணத் தொடர்பும் இந்தக் கோயிலுக்கு உள்ளது.
முதலையானது சிறுவன் ஒருவனை அப்படியே விழுங்கியது. இதையறிந்த சுந்தரனார், ‘எற்றான் மறக்கேன்’ என்று பதிகம் பாடி, சிவனாரை மனமுருகி வேண்டினார். சிவனருளாலும் இந்தப் பதிகத்தாலும் முதலை தன் வாய்க்குள்ளிருந்த சிறுவனை, வெளியே துப்பிவிட்டுச் சென்றது. அந்தச் சிறுவனும் சிவகடாட்சத்தால் உயிர் பிழைத்தான் என்று ஸ்தல புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோயிலில் உள்ள சனீஸ்வர பகவானும் ரொம்பவே விசேஷம். வசிஷ்ட மாமுனிவர் இங்கேயுள்ள சனீஸ்வரத் திருவிக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். எனவே, தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு சனீஸ்வரர் சாந்தமாக இருந்து அருள்பாலித்து வருகிறார். ஏழரைச்சனி மற்றும் கண்டகச்சனி என ஜாதக ரீதியாக கலங்கித் தவிப்பவர்கள், இங்கு வந்து அவிநாசியப்பரையும் கருணாம்பிகையையும் வேண்டிக்கொண்டு, அப்படியே சனீஸ்வரரையும் பிரார்த்தனை செய்தால், சனி பகவானின் கோபப்பார்வையில் இருந்து தப்பிக்கலாம்; சனி பகவான் அருளிக்காப்பார் என்கிறார் சுந்தரேச குருக்கள்.
காசிக்கு இணையான அவிநாசி என்பதற்கு உதாரணமாக, காசியில் உள்ள பைரவர் எப்படி சிறப்பு வாய்ந்தவராகத் திகழ்கிறாரோ பிரதான நாத பைரவராக இங்கே இருக்கும் பைரவர் திகழ்கிறார். தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடந்தேறுகின்றன.