மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டபோது, தென் மாநிலங்கள் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதால், பெரும் சிக்கலுக்கு உள்ளாகின. முன்னாள் முதல்வர் ஸ்டாலின் இந்த தொகுதி மறு சீரமைப்புக்கு கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்திருந்தார். அதே நேரம், மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஆந்திரா, தமிழ்நாடு அரசுகளிடமிருந்து எழுந்தது. இந்த நிலையில், ஆந்திரப் பிரதேசத்தில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில், ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, “ஒரு குடும்பத்தில் மூன்றாவது குழந்தை பிறந்தால் அரசு சார்பில் ரூ.30,000 ரொக்க ஊக்கத்தொகையும், நான்காவது குழந்தை பிறந்தால் ரூ.40,000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.
இந்தத் தொகை எந்தவொரு இடைத்தரகர்களின் தலையீடும் இன்றி, நேரடியாகத் தாயின் வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்படும். இந்த ரொக்க ஊக்கத்தொகை மட்டுமன்றி, பிறக்கும் குழந்தைகளின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு பராமரிப்பு, ஊட்டச்சத்து மற்றும் கல்வி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சிறப்புத் தொகுப்புத் திட்டம் (Special Package) தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முழுமையாகச் செயல்பாட்டிற்குக் கொண்டு வரும் வகையில், பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.’ என அறிவித்தார்.