“பெரியார் மண் என்று சொன்னாலும் தமிழகத்தில் அவ்வளவு இலகுவாக தலித் முதல்வராக முடியாது” என்று திருமாவளவன் பேசியிருக்கிறார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “திமுக – அதிமுக கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக என்னிடம் யாரும் பேசவில்லை. ஆனால், இது தொடர்பாக பல இடங்களில் கிசுகிசுப்பாக பேசப்பட்டது என்றுதான் பேட்டியில் சொல்லியிருந்தேன்.

தலைவர்கள் யாரும் என்னுடன் இதுபற்றி பேசவில்லை. எனக்கு இதுபற்றி தகவல்கள் வந்தபோது, இப்படிப் பேசுவதே தவறு என்றுதான் சொன்னேன். இன்னமும் நாங்கள் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். அதனால் திமுக தலைவரை எப்போது வேண்டுமானாலும் சந்திப்போம்.
தவெக ஆட்சியமைக்க மட்டுமே நாங்கள் ஆதரவளித்திருக்கிறோம். இரு எம்எல்ஏ-க்களால் ஆட்சியமைக்க முடியாமல் போய்விடக் கூடாது, குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது, மறுபடியும் ஒரு தேர்தல் வந்துவிடக் கூடாது என்பதால் நாங்கள் ஆதரவளித்தோம்.