மணிப்பூர்: முதல்வர் வீட்டருகே அரங்கேறிய போர்க்களம்: 22 பேர் மருத்துவமனையில் அனுமதி!

Spread the love

கடந்த ஏப்ரல் 7-ம் தேதி மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தின் ட்ராங்லாபி பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். இத்தாக்குதலில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, மணிப்பூர் ஒருமைப்பாட்டிற்கான ஒருங்கிணைப்புக் குழு (COCOMI) சார்பில் சனிக்கிழமை (ஏப்ரல் 25) பேரணி நடைபெற்றது. இம்பாலின் பாபுபாரா பகுதியில் உள்ள முதலமைச்சர் யும்னம் கேம்ச்சந்த் சிங்கின் இல்லத்தை நோக்கி நான்கு திசைகளிலிருந்தும் போராட்டக்காரர்கள் திரண்டு வந்தனர்.

மணிப்பூர் சோகம்

இம்பால் கிழக்கு மாவட்டத்தின் குரை லாம்லாங் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தடுப்புகளை அமைத்துப் போராட்டக்காரர்களைத் தடுத்தனர். தடையை மீறி முன்னேற முயன்றவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். இந்த மோதலில் 22 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போராட்டத்தின் இடையே, COCOMI தலைவர்கள் சிலர் முதலமைச்சரை நேரில் சந்தித்துத் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.

சமீபத்திய வன்முறைச் சம்பவங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும், பிஷ்ணுபூரில் மத்தியப் படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

அதேபோல உக்ருல் மாவட்டத்தில் நாகா இனத்தவர் மீதான தாக்குதலுக்குக் காரணமான குக்கி ஆயுதக் குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, அங்கும் மக்கள் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தின்போது துணை ராணுவப் படையின் கவச வாகனம் மோதியதில் கிராம மக்கள் இருவர் காயமடைந்தனர்.

மணிப்பூர் முதல்வர் யும்னம் கேம்ச்சந்த் சிங்- பிரதமர் மோடி
மணிப்பூர் முதல்வர் யும்னம் கேம்ச்சந்த் சிங்- பிரதமர் மோடி

உக்ருல் பகுதியில் நாகா கிராமவாசிகள் மீது தாக்குதல் நடத்திய குக்கி தீவிரவாதிகளுக்கு, ‘அசாம் ரைபிள்ஸ்’ படையினர் பாதுகாப்பு அளித்து ராணுவ சீருடைகளை வழங்கியதாக ‘வாய்ஸ் ஆஃப் தி நாகா யூத்’ என்ற அமைப்பு பரபரப்புக் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் இன மோதல்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் செயல்பாடுகளால் மணிப்பூரில் மீண்டும் வன்முறைச் சூழல் உருவாகியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *