`மீன்களுடன், நாங்களும் நோய் வந்து போக வேண்டியதுதான்!’
விவசாய நிலங்கள், கடல் என எதுவும் இல்லாத ராஜஸ்தான் பாலைவனத்தில் போய் இவர்கள் ஆராய்ச்சி செய்து எண்ணெய் உறிஞ்சிக் கொள்ளட்டுமே யார் வேண்டாம் என்றது? இங்கு வந்து ஏன் எங்களையும், எங்கள் வாழ்வாதாரத்தையும் அழிக்க வேண்டும்?” என்கிறார்.
தமிழ்நாடு பர்வதராஜகுல சங்கத்தின் செயல்தலைவரான கனகசபை, “பரம்பரை பரம்பரையாக கடலை நம்பித்தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தக் கடலும், மீன்களும்தான் எங்கள் குல தெய்வங்கள். சுமார் ஒரு கோடி உள்நாட்டு மீனவர்கள் இந்தக் கடலை நம்பித்தான் இருக்கிறோம். அப்படி இருக்கும்போது, மீனவர்கள் என்ற ஒரு சமூகமே இருக்கக் கூடாது என்று நினைத்து இப்படியான திட்டங்களை செயல்படுத்த துடிக்கிறது அரசு.
பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றை பயன்படுத்தினால் கடல் மாசடைந்துவிடும், கடல்வாழ் உயிரினங்கள் அழிந்துவிடும் என்று மக்களுக்கு வலியுறுத்தும் அரசு, மண்ணை மலடாக்கும், கடலை கருவறுக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மட்டும் செயல்படுத்த துடிப்பது ஏன்” என்கிறார்.

இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் வீ.கே.ராஜீவை அவரது செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டோம். அந்த அழைப்பை எடுத்த அவரது உதவியாளர் பிரகலாதன் என்பவரிடம், தகவலை தெரிவித்தோம். அதற்கு, “மீடியாவிடம் அமைச்சர் போனில் பேசமாட்டார். நேரில் வாருங்கள்” என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
CRZ-IVA என்றால் என்ன ?
கடலோரப் பகுதிகளைப் பாதுகாக்கவும், பொருளாதார மற்றும் பாதுகாப்புத் தேவைகளைச் சமநிலைப்படுத்தவும் அந்தப் பகுதிகள் CRZ-I, II, III, IV எனப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. CRZ-IV என்பது முழுக்க முழுக்க கடல் மற்றும் நீர் சார்ந்த பகுதிகளை (Water Area) ஒழுங்குமுறைப்படுத்து. அதில் CRZ-IVA என்பது இந்தியாவின் முக்கியக் நிலப்பரப்பை ஒட்டிய கடல் பகுதியையும், CRZ-IVB என்பது அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவுகள் போன்ற தீவுகளை ஒட்டிய கடல் பகுதியையும் குறிக்கிறது.