மண் பிரசாத மகிமை! திருக்கச்சூர் அதிசயம்! – Kumudam

Spread the love

ஜி.ராம்ஜி

கோயிலில் விபூதி தருவார்கள். குங்குமம் தருவார்கள். அத்துடன் மண்ணையே பிரசாதமாகத் தரும் ஆலயத்தை அறிந்திருக்கிறீர்களா? அப்படியொரு திருக்கோயில், சென்னைக்கு அருகில் இருப்பது தெரியுமா உங்களுக்கு?

சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ளது மறைமலைநகர். இங்கிருந்து 3 கி.மீ. பயணித்தால், திருக்கச்சூர் எனும் கிராமத்தை அடையலாம். பசுக்கள் அதிகமாக உலவிக்கொண்டிருக்கிற இந்த ஊரில், இரண்டு சிவாலயங்கள் இருக்கின்றன. ஊருக்கு நடுவே பிரமாண்டமாக அமைந்திருக்கிறது சிவன் கோயில். 

இந்தக் கோயிலும் பக்கத்திலேயே திருக்குளமும் தேர்முட்டி எனப்படும் தேர் நிறுத்தும் இடமும் பார்க்கவே நம் மனசு தக்கையாகிவிடும். ஊரில் பாதி கோயிலாக அமைந்திருக்கிற சிறப்புக் கொண்ட கோயிலில் குடிகொண்டிருக்கும் சிவனாரின் திருநாமம் கச்சபேஸ்வரர் அல்லது தியாகேஸ்வரர்.
ஊரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இந்தக் கோயில், பிரசித்தி பெற்ற ஆலயம். புராதனப் பெருமைகள் கொண்ட திருத்தலம். சுந்தரர் பெருமான் வந்து வழிபட்ட தலம் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். 

வீடு மனை யோகம் தந்து, இல்லறம் செழிக்கச் செய்வார் சிவபெருமான் என்கிறார் முரளி குருக்கள்.
இதேபோல் ஊர் முடியும் இடத்தில் மலை இருக்கிறது. மலையடிவாரத்தில் இன்னொரு சிவன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் குடிகொண்டிருக்கிற சிவனாரின் திருநாமம் மருந்தீஸ்வரர்.

சென்னை திருவான்மியூரில் அமைந்திருக்கும் மருந்தீஸ்வரர் கோயில் அத்தனை பிரமாண்டமில்லைதான். ஆனால் கீர்த்தி மிக்க கோயில், முக்தி தரும் கோயில், ஆயுள் தரும் ஆலயம், நோய் தீர்க்கும் கோயில் எனக் கொண்டாடுகிறார்கள் பக்தர்கள்!

அதுமட்டுமா? சித்தர்பெருமக்கள், பன்னெடுங்காலத்துக்கு முன்பாக, இந்த வனத்துக்கு வந்து, மலையிலும் அடிவாரத்திலும் இருந்தபடி, சிவபூஜை செய்தார்கள் என்றும் தவமிருந்தனர் என்றும் இன்றைக்கும் சூட்சுமவடிவாக, சித்தர்கள் இரவு வேளையிலும் அமாவாசை, பவுர்ணமி முதலான நாட்களில் விசேஷ பூஜைகள் செய்கிறார்கள் என்றும் ஸ்தல புராணம் சிலிர்ப்புடன் விவரிக்கிறது.

இதனால்தான், பவுர்ணமியில் இங்கே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து சிவ தரிசனம் மேற்கொள்கிறார்கள். திருவண்ணாமலை கிரிவலத்துக்குச் சென்று தரிசனம் செய்த பக்தர்கள், பல்லாவரம்,மதுராந்தகம், திண்டிவனம் என பல ஊர்களில் இருந்தும் குழுவாக வந்து, குடும்பமாக வந்து கிரிவலம் வந்து சிவனாரை வேண்டிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் மருந்தீஸ்வரர் கோயிலில் அந்த பூமியின் மண்ணே பிரசாதமாக வழங்கப்படுகிறது. அந்தக் கோயிலின் கொடிக்கம்பத்துக்கு அருகே மண் பிரசாதம் வைக்கப்பட்டுள்ளது. வயிறு முதலான நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதய நோய்க்கு சிகிச்சை மேற்கொண்டிருப்பவர்கள், படுத்தபடுக்கையாக இருப்பவர்கள் என நோயால் பீடிக்கப்பட்டவர்களுக்கு மண் பிரசாதம், சிவ மருந்து, சித்தமருந்து, சித்தர்கள் காலடி பட்ட மண் என கண்ணில் ஒற்றிக்கொண்டு, மண் பிரசாதத்தை எடுத்துச் செல்லும் பக்தர்கள் ஏராளம்.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவு இந்தக் கோயில். அதேபோல் மறைமலைநகர் ரயில் நிலையத்திலிருந்தும் 3 கி.மீ. தொலைவுதான்!

மண்ணே பிரசாதம், மண்ணே மருந்தெனத் திகழும் மருந்தீஸ்வரரையும் தியாகேசப் பெருமானையும் திருக்கச்சூருக்கு வந்து ஒருமுறையேனும் வழிபடுவோம்; நல்ல நல்ல அவை நல்ல நல்ல என சகல நன்மைகளையும் பெறலாம் என்பது உறுதி!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *