அல்லல் தீர்க்கும் ஆவணி ஞாயிறு வழிபாடு! – Kumudam

Spread the love

ஜி.ராம்ஜி

ஆவணி மாதத்தில் ஞாயிற்றுக்கிழமையில் வழிபாடு செய்வது வளமும் நலமும் பலமும் திடமும் தரக்கூடியது என்பார்கள். ஆகவே ஆவணி ஞாயிறில், அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று வழிபடுவதை மிஸ் செய்துவிடாதீர்கள்.

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கிரகங்களின் ஆதிக்கத்துக்கு கட்டுப்பட்டவை. அதேபோல் ஒவ்வொரு மாதத்தையும் ஒவ்வொரு ராசியுடன் ஒப்பிடுவது வழக்கம். கிழமைக்கும் கிரகங்களுக்கும் தொடர்பு உண்டு. திங்கள் – சந்திரன், செவ்வாய் – செவ்வாய்க்கிரகம், புதன் – புதன் பகவான், வியாழன் – குரு, வெள்ளி – சுக்கிரன், சனி – சனீஸ்வரர் என தொடர்புகள் இருக்கின்றன. 

அதேபோல், ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு உரிய நாள்.
ஆடியில் வெள்ளி, புரட்டாசியில் சனி, மாசியில் செவ்வாய் என்றெல்லாம் வழிபடச் சொல்லி அறிவுறுத்தியிருக்கிறார்கள். அதேபோல், ஆவணி மாதத்தில் ஞாயிற்றுக்கிழமையில் செய்கிற வழிபாடு மும்மடங்கு பலன்களைத் தரும் என்பது ஐதீகம்!

ஆவணி மாதத்தில் பாதியைக் கடந்துவிட்டோம். இன்னும் வருகிற ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில், நாம் எந்தக் கோயிலுக்குச் சென்று வழிபட்டாலும் நமக்கும் நம் சந்ததியினருக்கும் அளப்பரிய பலன்கள் கிடைக்கப்பெறும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

ஞாயிறு போற்றுதும் என்று கொண்டாடுகிறோம். அதேபோல் ஞாயிறு எனப்படுகிற சூரிய பகவானை கொண்டாடி, சூரிய பலம் பெறுவதற்கு எளிமையான வழிபாடே போதுமானது. முக்கியமாக, தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிற தாத்தா பாட்டிகளும் அம்மா அப்பாக்களும் வாழ்ந்த பூமி இது. நம் பரம்பரையில் நம் குடும்பத்தில் தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வழிபட்டு வந்ததை நாம் பார்த்திருக்கலாம்; கேட்டிருக்கலாம்! யோகா, தியானம் என மனதை ஒருநிலைப்படுத்துகிற பல விஷயங்களுக்குக் கூட, சூரிய நமஸ்காரம் அடிப்படையாக இருப்பதை இன்றைய ஹைடெக் காலத்தின் நவீன யோகா மையங்கள் வலியுறுத்திக்கொண்டுதான் இருக்கின்றன.

ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமையில் இஷ்டதெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு, மகான்கள் தரிசனம்,சித்தர்களின் ஜீவசமாதிகள் என தரிசனம் செய்யலாம். பட்டினத்தார், கோரக்க சித்தர், போகர் சித்தர் குடிகொண்டிருக்கும் பழநி, பாம்பன் சுவாமிகள் திருச்சமாதி, ரமணாஸ்ரமம், பகவான் யோகி ராம்சுரத்குமார் பிருந்தாவனம் என சென்று வழிபடலாம். அருகில் உள்ள இஷ்டதெய்வம் குடிகொண்டிருக்கும் எந்தக்கோயிலுக்கு, எந்த சுவாமியை வணங்கினாலும் அந்த ஞாயிறின் சக்தி, நம்முள் வியாபிக்கும். ‘ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி’ என சூரிய பகவானின் கதிர்களை, கரங்களுக்கு நிகராகச் சொல்கிற பாடல்களை அறிவோம்தானே..!

ஆவணியில் ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய தரிசனம், ஆலய வழிபாடு, எவருக்கேனும் வஸ்திரம் அல்லது அன்னம் முதலான தானங்கள் செய்தாலும் புண்ணியம் சேரும் என்பது தெளிவு!

ஆவணி ஞாயிறில் எந்தக் கோயிலுக்கு போகப்போகிறீர்கள்? உங்களின் இஷ்ட தெய்வக் கோயில் எது என்பதையும் பதிவிடுங்கள். அந்தக் கோயில்களுக்கு உங்களைப் போலான பக்தர்களும் சென்று வழிபடுவதற்கு அவை ஒரு வழிகாட்டியாக இருக்கலாம்தானே..!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *