மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை? தவெக வேட்பாளர்களுக்கு புது சிக்கல்..! – Kumudam

Spread the love

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் வரும் அக்டோபர் 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தொடங்கிய நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இடைத்தேர்தலில் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க. என அடுத்தடுத்து கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. கடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற சத்தியபாமாவும் தற்போது த.வெ.க. சார்பில் அதே தொகுதிகளில் களமிறங்கியுள்ளனர்.

இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்த இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்கள் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என்று பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக வழக்கறிஞர் சுதன் கொடுத்துள்ள மனுவில், மதுராந்தகம், தாராபுரம் உள்ளிட்ட தொகுதிகளில் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததன் காரணமாக தற்போது இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதிகள் தங்களது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாக அரசியல் காரணங்களுக்காக ராஜினாமா செய்வதால், அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் கூடுதல் செலவு ஏற்படுவதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

தேர்தல் செலவை வசூலிக்க கோரிக்கை

இதுபோன்று அரசியல் காரணங்களுக்காக பதவி விலகி இடைத்தேர்தல் நடத்தக் காரணமான முன்னாள் எம்.எல்.ஏ-க்களிடமே, இடைத்தேர்தலுக்காக அரசால் மேற்கொள்ளப்படும் செலவினத்தை வசூலிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. அத்துடன், பதவியை ராஜினாமா செய்து இடைத்தேர்தல் நடைபெறக் காரணமானவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை?

இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்தினால், பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவால் தேர்தல் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, வழக்கு முடியும் வரை மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலை நடத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணையின்போது, முன்னாள் எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா, அதனால் ஏற்பட்ட இடைத்தேர்தல் மற்றும் தேர்தல் செலவினம் தொடர்பாக நீதிமன்றம் என்ன நிலைப்பாடு எடுக்கிறது என்பது அரசியல் வட்டாரத்திலும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *