மதுரை, திருப்பரங்குன்றம் வெயிலுகந்த அம்மன்: உப்பும் மிளகும் வாங்கிப்போட்டால் நோய்கள் விலக்கும்! | madurai thirupparankundram veyiluganthaamman temple

Spread the love

அன்னை ஆதி சக்தி மக்களைக் காக்கும்பொருட்டு கோயில்கொண்ட தலங்கள் ஏராளம். அப்படி அன்னை ஒருமுறை சிறுமியாக ஓரிடத்தில் காட்சி கொடுத்தாள். அதுவும் எட்டுகரங்களுடன், வலது காலினை மடித்து அமர்ந்திருந்த திருக்கோலத்தில் ஆங்காரியாக ஓர் அசுரனைத் தன் இடதுகாலில் மிதித்தபடி அமர்ந்திருந்தாள்.

அப்போது இந்தக் காட்சியைக் கண்டவர்கள், அஞ்சி நடுங்கினர். ஊருக்குள் ஓடிச் சென்று இந்தத் தகவலை ஊர்மக்களிடையே சொன்னார்கள். மக்கள் வந்து பார்த்தபோது அங்கு அமர்ந்திருந்த அந்த அன்னையைக் காணவில்லை.

தாங்கள் இருக்கும் இடம் தேடி வந்து அமர்ந்த அந்தச் சிறுமி, அன்னை பராசக்தியின் வடிவே என்பதை அறிந்துகொண்டனர் மக்கள். அந்தச் சிறுமி அமர்ந்திருந்த இடத்தில் சிறு கல்லை நட்டு வழிபாடு செய்யத் தொடங்கினர். வெயிலுக்காக வந்து அமர்ந்ததால், அவளை “வெயிலுகந்த அம்மன்’ என்று அழைத்தனர்.

திருப்பரங்குன்றம் வெயிலுகந்த அம்மன்

திருப்பரங்குன்றம் வெயிலுகந்த அம்மன்

இப்படித் தானே விருப்பம்கொண்டு அம்மை அமர்ந்த இத்தலத்தின் மகிமை உலகெங்கும் பரவியது.

அன்னையின் திருவருளால் அங்கு வந்து வேண்டிக்கொண்டவர்களின் நோய்கள் நீங்கின. திருமலை நாயக்க மன்னனின் காதுகளுக்கு அம்மனின் பெருமைகள் சென்று சேர்ந்தன.

ஓடிவந்து அம்மனைத் தொழுதுகொண்டான். அந்த இடத்தில் அம்மனுக்கு ஓர் ஆலயத்தை அமைக்கவும் ஏற்பாடு செய்தான். அந்த ஆலயம்தான் தற்போது திருப்பரங்குன்றம் மலை அருகே அமைந்திருக்கும் வெயிலுகந்த அம்மன் கோயில்.

திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றியிருக்கும் வீதியில் அமைந்துள்ள இந்தத் திருக்கோயிலில் அம்மன் சந்நிதிக்கு முன்பாக இரண்டு பிரமாண்ட துவார பாலகர்கள் நிற்க மூல தெய்வமாக வெயிலுகந்த அம்மன் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி கொடுக்கிறாள்.

இந்த ஆலயத்தில் விநாயகர், கருப்பண்ணன், கால பைரவர், நவகிரகங்கள், நாக புற்று, அர்த்தநாதீஸ்வரர், மாணிக்கவாசகர், கத்தரிக்காய் சித்தர், வேதாலம்மன் ஆகிய தெய்வங்கள் மற்றும் அவதார புருஷர்களின் சந்நிதிகளும் அமைந்துள்ளன.

திருக்கோயிலின் பிராகாரங்களில் தமிழகத்தில் உள்ள முக்கிய அம்மன் கோயில்களின் ஓவியங்கள் தீட்டப்பட்டு காண்போரைக் கவர்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *