மீனாட்சி அம்மன் – சுந்தரேசுவரர் சந்நிதிகளின் மேல் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தங்க விமானங்கள், வேதியியல் நிபுணர்களின் உதவியுடன் எவ்வித சேதமுமின்றி தூய்மைப்படுத்தப்பட்டு, கலசங்கள் பளபளப்பாக்கப்பட்டுள்ளன. சந்நிதிகளின் மேல் தளங்களில் மழைநீர் கசிவதைத் தடுக்கும் பொருட்டு, சுமார் 2.5 லட்சத்தில் புதிய கூரை ஓடுகள் பாரம்பர்ய முறைப்படி பதிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் முற்றிலும் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபம், இந்தத் திருப்பணியின் மிக முக்கிய அங்கமாகும். பல கோடி ரூபாய் செலவில், பழங்காலத் தூண்களின் வடிவமைப்பிலேயே புதிய கற்கள் செதுக்கப்பட்டு, இம்மண்டபம் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்டது.
மேலும் ஆயிரங்கால் மண்டபம், உட்பிரகாரங்களில் உள்ள தூண்கள், சிற்பங்களில் பல ஆண்டுகளாகப் படிந்திருந்த எண்ணெய் மற்றும் கற்பூரப் புகைக் கறைகள் அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் மூலம் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன.
கோயிலின் பிரசாதங்கள், நெய்வேத்தியங்கள் தயாரிக்கும் மடைப்பள்ளி (சமையலறை) நவீனப்படுத்தப்பட்டுள்ளது. விறகு அடுப்புகளுக்குப் பதிலாக, புகை மாசற்ற (Eco-friendly) சமையல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, ஏற்கெனவே செயல்பாட்டில் இருந்த 50 சிசிடிவி (CCTV) கேமராக்களுடன், கூடுதலாக 75 நவீன உயர்ரக கண்காணிப்பு கேமராக்கள் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன.
கும்பாபிஷேகத்திற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கோயிலைச் சுற்றியுள்ள மாடவீதிகளில் இருந்த மின்சாரக் கம்பங்கள் அகற்றப்பட்டு, மின்சாரக் கம்பிகள் அனைத்தும் நிலத்தடி கேபிள்களாக (Underground Cables) மாற்றப்பட்டுள்ளன.
மாடவீதிகளில் பாதாளச் சாக்கடைக் குழாய்கள் முழுமையாகச் சீரமைக்கப்பட்டு, தடையற்ற குடிநீர், தற்காலிக சுகாதார வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.