அன்பில் மகேஷ் வீட்டிற்கு பறந்த CCB போலீசார்… நடந்தது என்ன? – Kumudam

Spread the love

கடந்த தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருவெறும்பூர் தொகுதியில் இருந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்நிலையில், 2026 சட்டசபை தேர்தலில் அவர் தோல்வியை சந்தித்தார்.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், திமுக நிர்வாகி பி.டி. அரசகுமார் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

அரசகுமார், கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் தனக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி, தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தரம் உயர்வு, DTCP, CMDA உள்ளிட்ட அனுமதிகளை பெற்றுத் தருவதாக கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் முக்கிய நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் வீட்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அன்பில் மகேஸ் தொடர்புடைய மேலும் 6 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சோதனை நடைபெறும் அவரது வீட்டின் முன்பு திமுக தொண்டர்கள் திரண்டதால், அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *