அதேவேளையில் முன்னோடி மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவராக அறியப்படும் எஸ்.வி. ராஜதுரை, உலக இலக்கியங்கள் பலவற்றை மூல படைப்புகளுக்கு இணையாக தமிழ் உலகிற்குக் கொண்டு வந்து குவித்தவர். தீவிரமான அரசியல் கலை இலக்கியப் படைப்புகளை வெளியிட்டு வரும் இவர், தமிழில் கிட்டத்தட்ட 80 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.
86 வயதான இவர், வயது முதிர்வு மற்றும் கண்பார்வை குறைபாடு உள்ளிட்ட பல்வேறு உடல்நலக்குறைவுகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து இலக்கியத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தன்னுடைய 86-வது வயதில் தன்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டு தமிழ் இலக்கிய உலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். “மத்தாயும் மாக்ரபோலும்’ என்ற தலைப்பிடப்பட்டுள்ள இந்தச் சிறுகதை தொகுப்பை பொன்னி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
மத்தாயும் மாக்ரபோலும், காலம் கெட்டுப்போச்சி, கலியுகம் பாருங்கோ, சாலைகள், கடற்கரை, முகமூடி, குளம், வழக்கு மரம், கை முறுக்கு மற்றும் ஆட்டுநர் ஆகிய தலைப்புகளில் 10 தலைப்புகளில் வெளியாகியுள்ள இந்தச் சிறுகதைகளை வாழ்வு அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு காலக்கட்டங்களில் எழுதப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.