மனைவிக்கு பயந்து வயலில் புதைத்த 5 லட்சம்.. 1 வருடம் கழித்து பார்த்து ராஜஸ்தான் விவசாயி கதறியது ஏன்? | Rajasthan Farmer Buried Rs 5 Lakh in Field Fearing His Wife.. Why Did He Cry a Year Later?

Spread the love

India

oi-Hema Vandhana

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் தனது சொந்த நிலத்தை விற்ற ரூ. 5 லட்சம் பணத்தை மனைவிக்குத் தெரியாமல் மண்ணுக்குள் புதைத்து வைத்தாராம் விவசாயி.. கடைசியில் அதை முழுமையாக இழந்து தவித்து கதறி கொண்டிருக்கிறார்.. பாதுகாப்பிற்காக மண்ணுக்குள் புதைத்த பணத்தை மொத்தமாக கரையான்கள் அரித்து விட்டன.. இந்த சோகமான சம்பவம் பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்…!!

ராஜஸ்தான் மாநிலம், பலோத்ரா மாவட்டம் பச்பத்ரா பகுதியை சேர்ந்தவர் மங்கிலால் மேக்வால்… இவர் ஒரு விவசாயி,. தனக்கு சொந்தமான பழைய நிலத்தை சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.5 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார்.

Rajasthan Farmer Buried Rs 5 Lakh

ராஜஸ்தான் விவசாயி

அந்த பணத்தைக் கொண்டு தன்னுடைய விவசாய நிலத்தில் ஒரு சின்ன அறை கட்ட வேண்டும் என்பது இவரது நீண்ட நாள் கனவாக இருந்தது. இருந்தாலும், நிலத்தை விற்ற பணத்தை தன்னுடைய மனைவியிடம் மறைத்து விட்டார்.. அந்தப் பணத்தை வீட்டில் வைத்தால் தேவையில்லாமல் செலவழிக்கப்பட்டு விடுமோ அல்லது யாராவது திருடிக்கொண்டு போய்விடுவார்களோ என்ற பயம் மங்கிலாலுக்கு எழுந்தது.

அதனால் யாரிடமும் சொல்லாமல் ரூ. 5 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை ஒரு பாலித்தீன் பையில் போட்டு, சுருட்டி தனது 6 ஏக்கர் விவசாய நிலத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குழி தோண்டிப் புதைத்து வைத்துள்ளார்.

5 லட்சம் ரூபாய்

மங்கிலாலுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாம்.. போதாக்குறைக்கு மறதியும் சேர்ந்து கொண்டுள்ளது.. அதனால் தன்னுடைய நிலத்தில் பணத்தை எந்த இடத்தில் புதைத்து வைத்தோம் என்பதையே மறந்துவிட்டார்.

ஒருகட்டத்தில் அறை கட்டுவதற்காக பணம் தேவைப்பட்டபோது, நிலத்திற்குச் சென்று தேடினார்.. ஆனால், எந்த இடத்தில் புதைத்தோம் என்பது நினைவில் இல்லாததால், தனது 6 ஏக்கர் நிலத்தின் அனைத்து இடங்களையும் தோண்டி தோண்டி பார்த்தார்.. ஆனால் பணம் கிடைக்கவில்லை.

வேறு வழியில்லாமல் தனது மனைவி மற்றும் மகன்களிடம் இந்த உண்மையை சொன்னார்.. ஆரம்பத்தில் குடும்பத்தினர் யாருமே அவரது பேச்சை நம்பவில்லை. குடிபோதையில் ஏதோ உளறுகிறார் என்றே நினைத்தனர். ஆனால், அவர் திரும்பத் திரும்பக் கண்ணீருடன் சொன்னதை கேட்டு, உண்மைதானோ என நினைத்தனர்.. உடனே குடும்பத்தினர் எல்லாரும்சேர்ந்து நிலத்தைத் தோண்டித் தேடும் பணியில் இறங்கினார்கள்.

பாலிதீன் கவரில் 100 ரூபாய் கட்டுகள்

இப்படியே ஒரு வருடம் ஓடியது.. ஒரு வருடமாக தேடியும் பணம் கிடைக்காத நிலையில், இந்த ஆண்டு பருவமழை பெய்து நிலம் விவசாயத்திற்கு தயாரானது. மழைக்கு பிறகு நிலத்தை உழுது தயார்படுத்துவதற்காக, டிராக்டர் மூலம் நிலத்தை குடும்பத்தினர் உழுதுள்ளனர்.. கைகளால் நிலத்தை பக்குவப்படுத்தியுள்ளனர்.. அப்போதுதான் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த அந்த பாலித்தீன் பை திடீரென வெளியே வந்தது.

அதைக் கண்ட மனைவியும் மகன்களும் ஓடிவந்து ஆர்வத்துடன் பையைத் திறந்து பார்த்தனர். ஆனால், ஒரு வருடமாக மண்ணுக்குள் ஈரப்பதத்தில் இருந்ததால், பாலித்தீன் பைக்குள் இருந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளையும் கரையான்கள் அரித்துவிட்டன.. ரூபாய் நோட்டுகள் எல்லாமே துண்டு துண்டாக கிழித்து நாசமாக்கியிருந்தன.

கரையான் அழித்து – காகித துகள்கள்

கண் முன்னே பணமெல்லாம் காகித தூள்களாக மாறியதைக் கண்டு மங்கிலால் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதையடுத்து, எஞ்சியிருந்த சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்துக் கொண்டு பச்பத்ராவில் உள்ள எஸ்பிஐ வங்கிக்கு சென்றார்சகள்..

ஆனால், நோட்டுகள் மிக மோசமான நிலையில் சேதமடைந்திருந்ததால், அந்த வங்கி அதிகாரிகள் பணத்தை மாற்றித்தர மறுத்து திருப்பி அனுப்பிவிட்டனர். பிறகு மாவட்டத் தலைநகரில் உள்ள எஸ்பிஐ பிரதான கிளைக்குச் சென்றபோதும் அவர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

கடைசியில், ஜெய்ப்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தை அணுகுமாறு வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள்.. அதனால், அந்த பணத்தை அங்கு எடுத்து சென்றுள்ளார் மங்கிலால்..

கஷ்டப்பட்டு உழைத்த பணம் கைக்கெட்டியும் வாய்க்கெட்டாமல் போய்க் கரையானுக்கு இரையானதை எண்ணி, விவசாயி மங்கிலால் கண்ணீர் விட்டு கதறும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரின் நெஞ்சையும் உலுக்கி வருகிறது….!!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *