மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான குமரக்கட்டளை (முருகன்) சன்னதி தனியாக உள்ளது.
தருமபுரம் ஆதீனத்தால் குமரக்கட்டளை சன்னதி நிர்வகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதில் உள்ள முருகன் உற்சவர் சிலை தொடர்பாக திருவாவடுதுறை, தருமபுரம் ஆதீனங்களுக்கு இடையே பிரச்னைகள் இருந்து வருகின்றன.

தருமபுரம் ஆதீனம் சார்பில் குமரக்கட்டளையில் கந்தசஷ்டி விழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கத்தையொட்டி முருகன் உற்சவர் சிலைக்கு சிறப்புப் பூஜைகள் செய்து வீதியுலா நடத்துவதற்கு தருமபுரம் ஆதீன நிர்வாகம் சார்பில் கேட்டுள்ளனர்.
அப்போது, துலா உற்சவம் நடப்பதால் விநாயகர், முருகர், சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் திருவீதியுலா செல்வது ஐதீகம் என்பதால் மாயூரநாதர் சுவாமியுடன் சேர்ந்து வழக்கம்போல் வீதியுலா செல்லும் என்று திருவாவடுதுறை ஆதீன நிர்வாகம் சார்பில் முருகன் சிலை தருவதற்கு மறுத்துள்ளனர்.