இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் (WFI) முன்னாள் தலைவரும், பா.ஜ.க-வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங், பெண் மல்யுத்த வீராங்கனைகள் தொடுத்த பாலியல் துன்புறுத்தல் வழக்கிலிருந்து டெல்லி நீதிமன்றத்தால் திங்கள்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 2016 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில், டெல்லியிலுள்ள மல்யுத்தக் கூட்டமைப்பு அலுவலகம், பிரிஜ் பூஷனின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களின்போது தங்களுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக 6 பெண் மல்யுத்த வீராங்கனைகள் புகார் அளித்திருந்தனர்.

இதில் மைனர் வீராங்கனை ஒருவர் அளித்த புகாரின் பேரில் பிரிஜ் பூஷன் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், பின்னர் அந்த வீராங்கனை புகாரைத் திரும்பப் பெற்றதால் அவ்வழக்கு முடிக்கப்பட்டது.
ஜூன் 15, 2023 அன்று இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 354 (பெண்ணின் கண்ணியத்தைக் குலைத்தல்), 354A (பாலியல் துன்புறுத்தல்), 354D (பின்தொடர்ந்து தொல்லை தருதல்) மற்றும் 506(1) (மிரட்டல் விடுத்தல்) ஆகியவற்றின் கீழ் டெல்லி காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.