நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத் தொடரில் இரண்டு மிக முக்கியமான அரசியலமைப்புச் சட்டத்திருத்த மசோதாக்களை நிறைவேற்ற ஆளும் பா.ஜ.க தீவிரமாக வியூகம் அமைத்து வருகிறது. இதற்கான பலப்பரீட்சையில் வெல்ல, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் திரட்டும் தீவிரப் பணிகளில் ஆளும் கூட்டணி தற்போதே இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மத்திய அரசு 130-வது சட்டத்திருத்த மசோதா அதாவது, வெறும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஒரு பிரதமர், முதலமைச்சர் அல்லது அமைச்சர் 30 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டால், அவர்களை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்குவதற்கு இந்த மசோதா வழிவகை செய்கிறது.
131-வது சட்டத்திருத்த மசோதா, ஏற்கனவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 33 சதவீத மகளிர் இடஒதுக்கீட்டை, தொகுதி மறுவரையறை (Delimitation) நடவடிக்கையுடன் இந்த மசோதா இணைக்கிறது. இதன் மூலம் மக்களவை இடங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்த இரண்டு மசோதாக்களையும் நிறைவேற்ற அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும். அதனால், சாதாரண பெரும்பான்மை இந்த மசோதாக்களை நிறைவேற்ற போதாது. எனவே, மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் மூன்றில் இரண்டு பங்கு (2/3) சிறப்புப் பெரும்பான்மை அரசுக்குத் தேவைப்படுகிறது. இதற்காக, எதிர்க்கட்சிக் கூட்டணியில் உள்ள விரிசல்களைப் பயன்படுத்தி, சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற பா.ஜ.க-வின் நாடாளுமன்ற மேலாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வரப்பட்டபோது, தேவையான எண்ணிக்கையை விட 54 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வியடைந்தது. அப்போது 528 எம்.பி.க்கள் வாக்களித்ததில், மசோதாவிற்கு ஆதரவாக 298 வாக்குகளும், எதிராக 230 வாக்குகளும் மட்டுமே கிடைத்தன. ஆனால், சிறப்புப் பெரும்பான்மைக்கு 352 வாக்குகள் தேவைப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் ஆளும் என்.டி.ஏ (NDA) கூட்டணிக்குச் சாதகமாக அமைந்துள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 20 அதிருப்தி எம்.பி.க்கள், சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அவர்கள் ‘தேசியவாத குடிமக்கள் கட்சி’ என்ற புதிய குழுவாக இணைந்து, பா.ஜ.க தலைமையிலான கூட்டணியை ஆதரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
மாநிலத்தில் ஆட்சியை இழந்த தி.மு.க மக்களவையில் 22 இடங்களையும், மாநிலங்களவையில் 8 இடங்களையும் வைத்திருக்கிறது. மேலும், எரியும் நெருப்பில் எண்ணெய்யாக த.வெ.க தலைவர் சி. ஜோசப் விஜய் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவளித்ததால், தி.மு.க காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியிலிருந்து சற்று விலகி நிற்கிறது.
இந்த விரிசல் காரணமாக, தி.மு.க இந்த வாக்கெடுப்பில் பா.ஜ.க அரசுக்கு ஆதரவாகவோ அல்லது நடுநிலையாகவோ செயல்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மக்களவையில் மொத்தம் உள்ள 540 எம்.பி.க்களில், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற 360 வாக்குகள் தேவை. தற்போது ஆளும் கூட்டணியிடம் 292 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர். மசோதா நிறைவேறா 68 இடங்கள் குறைவாக உள்ளன.
மாறிவரும் அரசியல் சூழலில் (ஜூலை 15-ம் தேதி வரையிலான நிலவரப்படி) பா.ஜ.க இரண்டு வகையில் தன் திட்டத்தைச் சாத்தியமாக்க கணக்கிட்டு வருவதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அதன் அடிப்படையில் முதலாவது, தற்போதைய ஆளும் கூட்டணி பலம் 292, எனவே, திரிணாமுல் அதிருப்தியாளர்கள் (20 பேர்) இணைந்தால் பலம் 312 ஆக உயரும்.
சிவசேனா (யுபிடி) அதிருப்தியாளர்கள் (6 பேர்) இணைந்தால் 318 ஆக அதிகரிக்கும். தி.மு.க (22 பேர்) ஆதரவளித்தால் என்.டி.ஏ பலம் 340-ஐ எட்டும்.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் 50 சதவீத இடங்களைச் சீராக உயர்த்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் சுப்ரியா சுலே ஆதரவளிக்க முன்வந்துள்ளார். அதன்படி தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் பிரிவு – 8 பேர்) ஆதரவளித்தால் 348 எனப் பலம் கூடும்.
இருப்பினும், பா.ஜ.க-விற்கு இன்னும் 12 வாக்குகள் தேவைப்படும். இதற்காக ஒய்.எஸ்.ஆர்.சி.பி (4), ஜே.எம்.எம் (3), வி.சி.க (2), ஆர்.எல்.பி (1), அகாலி தளம் (1) மற்றும் சுயேச்சைகளை பா.ஜ.க அணுகக்கூடும்.

இரண்டாவதாக… ஒருவேளை திரிணாமுல் அதிருப்தியாளர்கள், தி.மு.க, சிவசேனா மற்றும் சரத் பவார் பிரிவினர் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தால், அவையில் வாக்களிக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கை 484 ஆகக் குறையும். அப்போது தேவையான சிறப்புப் பெரும்பான்மை இலக்கு 323 ஆக மாறும். அப்போதும் பா.ஜ.க-விற்குத் தற்போதைய பலத்தை விட 31 வாக்குகளின் ஆதரவு கூடுதலாகத் தேவைப்படும்.
மாநிலங்களவையின் தற்போதைய பலம் 242 ஆக உள்ளது. இங்கு சிறப்புப் பெரும்பான்மை பெற 162 வாக்குகள் தேவை. தற்போது ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிடம் 150 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர். தி.மு.க (8), சரத் பவார் கட்சி (1) ஆதரவளித்தால் பலம் 159 ஆக உயரும்.
மேற்கு வங்க இடைத்தேர்தலில் பா.ஜ.க 3 இடங்களில் வென்றால் பலம் 162 ஆக மாறும். ஆனால், அவை முழு பலமான 245 ஐ எட்டும்போது, இலக்கு 164 ஆக உயரும். இதனால் ஒய்.எஸ்.ஆர்.சி.பி (7), பிஜேடி (5), பிஆர்எஸ் (3) போன்ற நடுநிலை கட்சிகளின் உதவி பா.ஜ.க-விற்குத் தேவைப்படும்.

மாநிலங்களவையிலும் தி.மு.க மற்றும் சரத் பவார் கட்சியின் 9 எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தால், அவையின் வாக்களிக்கும் பலம் 233 ஆகக் குறையும். இலக்கு 156 ஆக மாறும். ஆனால், பா.ஜ.க 150 இடங்களில் இருப்பதால் இன்னும் 6 வாக்குகள் குறைவாகவே இருக்கும். புதிய 3 எம்.பி.க்கள் சேர்ந்தாலும், தேவையான இலக்கு 158 ஆக மாறும், பா.ஜ.க 153 உடன் 5 வாக்குகள் பற்றாக்குறையைச் சந்திக்கும்.
எப்படிப் பார்த்தாலும் பா.ஜ.க கொண்டுவர துடிக்கும் இந்த இரண்டு மசோதாக்களும் வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் என்னென்ன அரசியல் மாற்றங்கள் நடத்தப்படுகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.