இதைத் தொடர்ந்து, அமைச்சர் வினோத், நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்காமல், திடீரென திறந்தவெளி கிடங்கிற்கு ஆய்வுக்குச் சென்றார். அப்போது, நெல் மூட்டை அடுக்குகளில், தார்ப்பாய்கள் கிழிந்து, நெல் மூட்டைகள் மழையில் நனைந்திருந்ததுடன் சாக்குகள் கிழிந்து நெல் மணிகள் கீழே கொட்டியும் வீணாகி கிடப்பதைப் பார்த்தார். உடனடியாக நுகர்பொருள் வாணிபக் கழக, மண்டல மேலாளரை தொடர்பு கொண்டு, நெல் மூட்டைகள் பாதுகாப்பாக உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும், எத்தனை முறை உங்களுக்கு அறிவுறுத்துவது எனக் கடிந்து கொண்டார். மேலும், அங்குள்ள பணியாளர்களை அழைத்து நெல் மூட்டைகளைப் பாதுகாப்பதை விட உங்களுக்கு என்ன வேலை என்றும் கேட்டார்.

பின்னர் அமைச்சர் வினோத் செய்தியாளர்களிடம், “தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால், அனைத்து நெல் சேமிப்பு கிடங்குளை, ஆய்வு செய்து நெல் மூட்டைகள் மழையில் பாதிக்காத வகையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை அனுப்ப வேளாண்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தாழ்வான வயல்களில் மழை நீர் தேங்கி விவசாயிகள் பாதிக்கப்படும் நிலையில், மழைநீர் தேங்கும் பகுதிகளை ஆய்வு செய்து, நீர் வெளியேறும் வகையில், நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளன.