மழை எச்சரிக்கை அலர்ட்.. 7 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை! சென்னைக்கும் வார்னிங்..! – Kumudam

Spread the love

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (அக்.20) பல்வேறு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன்போது மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் இடி, மின்னலும் ஏற்படக்கூடும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இதேபோன்ற வானிலை நிலவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வெப்பநிலையில் பெரிய மாற்றம் இல்லை

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அக்டோபர் 19 முதல் 23-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. இந்தக் காலகட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் எப்படி இருக்கும்?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும் என வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கனமழை மற்றும் பலத்த காற்று எதிர்பார்க்கப்படும் மாவட்டங்களில் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *