காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, டெல்லி 10, ராஜாஜி மார்க்கில் உள்ள அவரது இல்லத்திற்கு காங்கிரஸ் கட்சி எம்.பி-க்கள் அழைக்கப்பட்டிருந்தனர். மாலை 3 மணியளவில் வாழ்த்துகளைத் தெரிவித்து முடித்ததும், கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோர் இல்லத்திலிருந்து வெளியே வந்தனர். அப்போது, மாணவர்கள் மீதான தாக்குதல், அதையும் கடந்த மாணவர்களின் போராட்டம் என டெல்லி பரபரப்பாக இருக்கும் நிலையில், “வாருங்கள், இந்தப் பிரச்சினையில் பிரதமரைத் தட்டி எழுப்புவோம். அவரது இல்லத்திற்குச் செல்வோம்” என்று ராகுல் காந்தி அழைப்பு விடுத்து, போராட்டத் திட்டத்தை அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்யக் கோரி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் “இந்தியா’ கூட்டணியின் முக்கியப் பிரதிநிதிகள் பிரதமர் இல்லம் நோக்கிப் பேரணியாகச் சென்றனர். கார்கேவின் இல்லத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள பிரதமர் மோடியின் இல்லம் அருகே தலைவர்கள் திரண்டு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பாதுகாப்புப் படையினர் பெரும் திணறலுக்கு உள்ளாயினர்.