India
oi-Vigneshkumar
ராஞ்சி: ஜார்க்கண்டில் அரசு வேலைகளுக்கு நடத்தப்பட்ட தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், மாணவர் கோரிக்கைக்கு ஜார்க்கண்ட் அரசு பணிந்துள்ளது. JSSC-CGL தேர்வு மற்றும் TDPL மூலம் நடத்தப்பட்ட தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்த முதலமைச்சர் ஹேமந்த் சோரன், கடந்த 2014 முதல் டிடிஎல்பி மூலம் நடத்தப்பட்ட அனைத்து தேர்வுகளும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படும் என அறிவித்தார்.
கடந்த மாதம் டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக கரப்பான் பூச்சி கட்சியினர் பிரம்மாண்ட போராட்டத்தை நடத்தியது அனைவருக்கும் தெரியும். அந்த போராட்டத்தை தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்திலும் மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். அம்மாநில அரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்தது.

பணிந்த சோரன் அரசு
அரசு தேர்வுகளில் நடந்த முறைகேடுகளுக்கு எதிராக இந்த போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வந்த நிலையில், JSSC-CGL தேர்வு மற்றும் TDPL மூலம் நடத்தப்பட்ட தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார். மாணவர்களின் முக்கிய கோரிக்கையாக இது இருந்த நிலையில், அதை ஜார்க்கண்ட் அரசு ஏற்றுள்ளது.
சிபிஐ விசாரணை
மேலும், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் டிடிபிஎல் நடத்திய அனைத்து தேர்வுகளும் சிஐடி விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்றும், தேர்வு முறைகேடுகள் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தனியாக விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றும் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார். இது மாணவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த மிக பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
தேர்வு முறைகேடுகள் மற்றும் ஆட்சேர்ப்பில் வெளிப்படைத்தன்மை கோரி ஜார்க்கண்டில் மாணவர்கள் கடந்த 24 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களுடன் அரசு தரப்பில் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும், அதில் எந்தவொரு உடன்பாடும் ஏற்படவில்லை. இந்தச் சூழலில் தான் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையில் அரசு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.
தேர்வு ரத்து
அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹேமந்த் சோரன், “டிடிபிஎல் நடத்திய அனைத்து தேர்வுகளும், டிடிபிஎல் வெளியிட்ட தேர்வு முடிவுகளும் ரத்து செய்யப்படுகின்றன. டிடிபிஎல் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகள் மற்றும் ஆட்சேர்ப்பு அனைத்தும் ரத்து செய்யப்படும். மாணவர்கள் எழுப்பியுள்ள பிரச்சினைகளை அரசு தீவிரமாக எடுத்து கொண்டுள்ளது. அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசு உறுதியாக இருக்கிறது.
தேர்வு முறைகேடுகள் தொடர்பாக ஏற்கனவே நடத்தப்பட்ட சிஐடி மற்றும் எஸ்ஐடி விசாரணைகளில் பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மேலும், ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையம் மூலம் பணியில் சேர்ந்த சிலர் தேர்வு மோசடி மற்றும் முறைகேடுகள் ஈடுபட்டதாக கைதும் செய்யப்பட்டுள்ளனர். 2014ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட அனைத்து தேர்வுகளும் சிஐடி விசாரணைக்கு உட்படுத்தப்படும். மேலும், முறைகேடுகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தனி விசாரணையும் நடைபெறும்.
நடவடிக்கை எடுப்போம்
தேர்வுகளை நடத்துவதற்கான தெளிவான எஸ்ஓபி விதிமுறைகளை ஜார்க்கண்ட் அரசு அறிவித்திருந்தது. இருப்பினும் அவை முறையாக பின்பற்றப்படவில்லை. சமீபத்திய தேர்வுகளில் முறைகேடுகள் நடக்க அதுவே காரணம். எதிர்காலத்தில் தேர்வு மற்றும் ஆட்சேர்ப்பு நடைமுறைகளை முழுமையாக சீர்திருத்தி, வெளிப்படைத்தன்மையுடன் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
மாணவர்கள் தங்களது புகார்களை நேரடியாக பதிவு செய்வதற்காக அரசு தனி இணையதளத்தையும் உருவாக்கியுள்ளது. அதில் பெறப்படும் புகார்கள், தேர்வு முறைகேடுகள் குறித்து நிபுணர் குழு ஆய்வு செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு அமிதாப் கௌஷல் தலைமை வகிப்பார் என்றும் ஹேமந்த் சோரன் அறிவித்தார்.


