
JSSC-CGL தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும், ஆட்சேர்ப்பு நடைமுறையில் சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தேர்வர்கள் முன்வைத்து வருகின்றனர். தங்களது கோரிக்கைகள் முழுமையாக ஏற்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக போலீசார் தடியடி நடத்தி, தண்ணீரைப் பீய்ச்சியடித்ததாக கூறப்படும் நிலையில், மாணவர் தலைவர் தேவேந்திர மஹதோவும் போலீஸ் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் கடந்த 9 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், போலீசாரால் தாக்கப்பட்டதாகவும், இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, மாணவர்கள் தங்களது உரிமைகள் மற்றும் எதிர்காலத்துக்காக போராடி வரும் நிலையில், அவர்களுக்கு எதிராக வன்முறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது ஏன் என கேள்விகள் எழுந்துள்ளன. அரசியல் கட்சிகளின் போராட்டங்களுக்கும், மாணவர்களின் போராட்டங்களுக்கும் போலீசார் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் வேறுபாடு காட்டப்படுகிறதா என்ற விவாதமும் தற்போது உருவாகியுள்ளது.
இந்த போராட்டம் தொடர்பாக ‘Cockroach Janata Party’ நிறுவனர் அபிஜீத் தீப்கேவும் போலீசாரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மாணவர்கள் எந்தவித அரசியல் நோக்கத்துடனும் போராடவில்லை என்றும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, மாணவர்கள் மீது போலீசார் நடத்திய நடவடிக்கையைக் கண்டித்து ஜார்க்கண்ட் பாஜக சார்பில் மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் தேர்வர்கள் போராட்ட விவகாரம் அரசியல் ரீதியாகவும் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், கிராமப்புற அரசுப் பள்ளிகளில் நிலவும் கல்வி உள்கட்டமைப்பு குறைபாடுகளைச் சீரமைக்கும் நோக்கில் நாடு முழுவதும் பிரசார இயக்கம் ஒன்றை முன்னெடுக்கப் போவதாகவும் CJP அறிவித்துள்ளது. கிராமப்புற பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, மாணவர்களுக்கு சிறந்த கல்விச்சூழலை உருவாக்குவதே இந்தப் பிரசார இயக்கத்தின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.