மாதங்கி, மரகதமணி, மீனாட்சி நீதான்டி…கும்பாபிஷேக தரிசன பலன் கிடைக்கணுமா?   – Kumudam

Spread the love

பலன் தரும் பரிகாரம்! –  வி.ராம்ஜி

மதுரையில் மட்டுமா மீனாட்சி ஆட்சி செய்துகொண்டிருக்கிறாள்? அகில உலகத்துக்கும் தன் கடைக்கண் பார்வையால், வரங்களை வாரிவாரித் தந்துகொண்டே இருக்கிறாள் மீனாட்சியம்மன். அவள் குடிகொண்டிருக்கும் மதுரையம்பதி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்த வேளையில், மண்டலாபிஷேக பூஜைகள் விமரிசையாக தினமும் நடந்துகொண்டிருக்கின்றன. கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்களுக்குள் மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்று தரிசித்தால், கும்பாபிஷேகத்தன்று தரிசித்த முழுப்பலனும் அருளும் கிடைக்கப்பெறலாம் என்பது ஐதீகம்!

இந்தவேளையில், மதுரையை ஆட்சி செய்து மக்களுக்கு அருளும்பொருளும் அள்ளித்தரும் மீனாட்சியின் அவதார சரிதத்தை அறிவோம்; அவளைக் கண்ணாரத் தரிசிப்போம்!

மதுரையை ஆட்சி செய்த குலசேகர பாண்டிய மன்னன் சிவபக்தன். சிவனருளால், அவனுக்கு மகன் பிறந்தான். மலையத்துவஜன் எனப் பெயரிட்டான். தந்தையைப் போலவே மகன் மலையத்துவஜனும் மாறா சிவபக்தி கொண்டிருந்தான். சதாசர்வ காலமும் சதாசிவத்தையே நினைத்துக் கொண்டிருந்தான்.

சோழ மன்னன் சூரசேனனின் மகளான காஞ்சனமாலையை மணம் புரிந்தான். நீதி தவறாத ஆட்சியும் மாறாத பக்தியும் கொண்டிருந்தாலும் இந்தத் தம்பதிக்கு ஒரேயொரு குறை… குழந்தை இல்லையே என்று! ’போகாத கோயிலில்லை; கும்பிடாத சாமியில்லை; பாக்காத வைத்தியமில்லை’ என்பார்களே… அதேபோல், ஒருபக்கம் வைத்தியம்… இன்னொரு பக்கம் ஆலய தரிசனம் என என்னென்னவோ செய்தான். நிறைவாக, புத்திரகாமேஷ்டி யாகம் செய்ய ஆச்சார்யர்கள் சொன்னார்கள். அவர்களின் அறிவுறுத்தலின்படி, மிகப்பிரமாண்டாகவும் நியமத்துடனும் யாகபூஜை மேற்கொண்டான் மன்னன்!

அப்போது அந்த ஹோம குண்டத்தில் இருந்து முத்துமாலைகளால் சுற்றப்பட்ட கொண்டை, நவரத்னக் கற்கள் பதித்த ஆபரணங்கல் அணிந்தபடி, சிறுமி வடிவில் அழகாக, மிக ஒயிலாக, எழுந்தாள்; நடந்தாள்; தகதகவென ஜொலித்தபடி காட்சி தந்தாள். அந்தச் சிறுமியைக் கண்டு அதிர்ந்து மகிழ்ந்தார்கள் மன்னனும் மகாராணியும்!

மதுரை தேசத்தின் இளவரசியான மகளுக்கு, கல்வியும் கலைகளும் போருக்கான பயிற்சிகள் உள்ளிட்டவையும் கற்றுக்கொடுக்கப்பட்டன. உரிய வயது வந்தது. அவளுக்கு மணிமகுடம் சூட்டப்பட்டது. சிலநாளில் தந்தை இறந்துபோக, அந்தத் துக்கத்தில் இருந்தாள். தலைமை அமைச்சர் பொறுப்பில் இருந்த சுமதி என்பவள், மகாராணி மீது கனிவும் அவருக்கு அறிவுரையும் கொண்டு விளங்கினாள். மலையத்துவஜரின் மகள் நல்லாட்சி புரிகிறாள் என்று ஊரே கொண்டாடியது.மக்கள் நிம்மதியும் நிறைவுமாக வாழ்ந்தார்கள்.

சிலகாலம் கழித்து, ஒருநாள்… திக்விஜயம் புறப்பட்டாள் மகாராணி. இந்த விஜயத்தால், உரிய மணவாளனைக் காணும் தருணம் வரும். அவள் பிறப்பின் நோக்கம் நிறைவுறும் என அசரீரி வந்ததால் ஏற்பட்ட முடிவு இது. மகாராணி மீனாட்சியும் தேசம் முழுக்க திக்விஜயம் செய்தாள். ஆனால், மாலையிடும் மணவாளனைக் கண்டறிய முடியவில்லை. அக்னிகுண்டத்தில் இருந்து வெளிவந்த மீனாட்சிக்கு, பூலோகத்திலா கிடைப்பான் மணாளன்? தேவலோகத்தில் அல்லவா அவன் இருப்பான்?

போன தேசமெங்கும் வெற்றிக்கொடி நாட்டினாள் ராணி மீனாட்சி. ’பூலோகம் மட்டுமின்றி விண்ணுலகிலும் உங்களின் ராஜ்ஜியம் நடக்கவேண்டும் மகாராணி’ என்றாள் அமைச்சர் சுமதி. அதன்படி, அடுத்தகட்டமாக விண்ணுக்குப் பறந்தாள் மீனாட்சி. அவளை வழியில் தடுக்கவும் ஜெயிக்கவும் எந்த சக்தியும் இல்லை. எந்தத் தடையும் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. நெருங்கக் கூட முடியவில்லை. அவள் யார் என்பதை உணர்ந்த சிவகணங்கள் அரண் போல் நின்று காத்தனர். தேவர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் வணங்கி வரவேற்றனர். திருக்கயிலாயத்தை அடைந்தபோது, சிலிர்த்துப் போனாள் மீனாட்சி.

அங்கே… திருக்கயிலாயநாதனைக் கண்டாள். சிவபெருமானைப் பார்த்ததும் ஆனந்தத்தில் அழுது தீர்த்தாள். அதேநேரத்தில்… போர் புரிவதற்காக வாள் உயர்த்தினாள். கையிலிருந்த வாள் நழுவியது. கீழே விழுந்தது. சிவனாரைக் கண்டு நாணினாள். வெட்கப்பட்டாள்.

அங்கே அவளின் மூன்றாவது ஸ்தனம் மறைந்தது. ‘இதோ… இவரே என் மணாளன்’ என உறுதிபூண்டாள். உடன் வந்த அமைச்சர், ‘சிவமே… எங்கள் ராணியை மணந்துகொள்ளவேண்டும்’என வேண்டினாள். அதற்கு சிவனார், ‘பூவுலகில் மதுராபுரியில் திருமண ஏற்பாடுகள் நடக்கட்டும். வருகிறேன்’ என அருளினார். அதன்படி, திருமண ஏற்பாடுகள் ஜாம்ஜாமென நடந்துகொண்டிருந்தன. தேவர்களும் முனிவர்களும் ஞானிகளும் சித்தர் பெருமக்களும் பூவுலகுக்கு வந்தார்கள்.

மதுரையம்பதி என்று போற்றப்படும் மாநகருக்கு வந்தார்கள். இவர்கள் மட்டுமா? உலகையும் நம்மையும் படைத்த பிரம்மதேவனும் நம்மைக் காக்கும் பரந்தாமன் மகாவிஷ்ணுவும் வந்தார்கள். பிரம்மா திருமணத்தை நடத்திவைத்தார். சகோதரியின் திருமணத்தை மகாவிஷ்ணு நடத்திவைத்தார். தங்கையின் திருக்கரங்களை ஈசனின் வலது திருக்கரத்தில் வைத்தார். கலச நீரால் தாராதத்தம் செய்தார். சிவனாரின் இடதில் உமையவள் நின்றாள். சிவ பார்வதியாக உலகுக்கு தரிசனம் தந்தார்கள்.

’தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என சிரசின் மேல் கைகுவித்து நமஸ்கரித்து, நெடுஞ்சாண்கிடையாக நமஸ்கரித்தார்கள். மீனாட்சியாகவும் சொக்கேசனாகவும் இருந்து மதுராபுரியில், மதுரையம்பதியில், மாமதுரையில் இன்றைக்கும் அருள்பாலித்து வருகிறார்கள்  என்கிறது மீனாட்சி அம்மன்  ஸ்தல புராணம்.

அதனால்தான், வருடந்தோறும் சித்திரை மாதப் பெருவிழா கோலாகலமாக நடைபெறுவது இங்கே வழக்கம். இதில் முக்கியமானதொரு வைபவம்… மீனாட்சியம்மைக்கு நிகழும் திருக்கல்யாணம். இந்தக் கோயிலில்தான் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கவேண்டிய கும்பாபிஷேக வைபவம், 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தமுறை நடந்திருக்கிறது.

கும்பாபிஷேகத்தின் போது கோபுர தரிசனம் செய்யவேண்டும். கலசாபித்தை தரிசிக்கவேண்டும். கலசநீரின் ஒருதுளியேனும் நம் சிரசின் மீது விழவேண்டும். அம்மையை, அன்னையை,மீனாட்சித்தாயை தரிசித்து வணங்கவேண்டும். இப்படி கும்பாபிஷேகத்தில் வழிபட்டால், ஏழு ஜென்ம பாவங்களும் போக்கியருளுவாள் மீனாட்சி அன்னை என்பது ஐதீகம்!

ஒருவேளை… கும்பாபிஷேக நாளில் தரிசிக்க இயலாமல் போனால், அதையடுத்து 48 நாட்களும் மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறும் என்றும் அந்த நாட்களுக்குள் ஏதேனும் ஒருநாளில், கும்பாபிஷேகம் நடந்த கோயிலுக்குள் நுழைந்து, கலசாபிஷேகம் செய்யப்பட்ட கோபுரத்தையும் கலசத்தையும் பார்த்து மனதார வணங்கி, கோயிலினுள்ளே குடிகொண்டிருக்கும் அன்னையை, தகதகவென ஜொலிக்கும் மதுரை அரசாளும் மீனாட்சியைத் தரிசித்துப் பிரார்த்தனை செய்தால், கும்பாபிஷேக நாளில் தரிசித்த பலன்கள் முழுமையாகக் கிடைக்கும் என்பது ஐதீகம்!

முத்துமணி பவளமணி மாலைகளை சூடி, சிரசில் தகதகவென ஜ்வலிக்கும் மாதங்கி, மரகதமணி என அணிந்து நமக்கு கடாட்சம் தரும் மீனாட்சி அன்னையை தரிசிப்போம்; அவளின் கடைக்கண் நம் மீது பட்டாலே கோடி புண்ணியம் நமக்கு!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *