மார்கண்டேயனை படம் பிடிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் – நாக்கை துருத்தி மிரட்டல் விடுத்த ஏடிஎஸ்பி!

Spread the love

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த தி.மு.க பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ மார்கண்டேயன், “எலும்பை உடைத்து விடுவேன்” என முதல்வர் விஜய்யை பார்த்து கொலை மிரட்டல் விடும் தொனியில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து த.வெ.கவினர் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் அளித்த புகார் மனுவின் அடிப்படையில் நேற்று காலை விளாத்திகுளம் – அம்பாள்நகரில் உள்ள அவரது இல்லத்தில் அவரை கைது செய்தனர்.

மிரட்டிய ஏடிஎஸ்பி திபு

சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மார்கண்டேயனை பார்க்க வந்த முன்னாள் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.எல்.ஏக்கள் அப்துல் வகாப், கருணாநிதி ஆகியோருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இரவு சுமார் 7 மணியளவில் மருத்துவப் பரிசோதனைக்காக மார்கண்டேயன், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். வழக்கமாக அழைத்து வரப்படும் முன் வாசல் வழியாக அல்லாமல் பின் வாசல் வழியாக அழைத்து வரப்பட்டார்.

அப்போது மார்கண்டேயனை படம் பிடிக்கச் சென்ற பத்திரிகையாளர்களை தூத்துக்குடி மாவட்ட ஏ.டி.எஸ்.பி திபு, மிரட்டதுடன் நாக்கை துருத்தியும், கைகளை ஓங்கியும் சில வார்த்தைகளை மிரட்டும் தொனியில் பேசினார். சக காவல் அதிகாரிகள் அவரை தடுக்க முயன்ற போதிலும், கண்டு கொள்ளாமல் தொடர்ந்து வரம்பு மீறி நடந்து கொண்டார். அவரது நடவடிக்கைக்கு பத்திரிகையாளர்கள் அந்த இடத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ

முந்தைய சட்டமன்றத் தேர்தல் வேட்புமனுத் தாக்கலின்போது, தூத்துக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்தும், இதே போல் திபு, பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டார். ஏ.டி.எஸ்.பி., திபுவின் நடவடிக்கைகள் தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு எதிராக இருப்பதாக தூத்துக்குடி பிரஸ் கிளப் உட்பட பல பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.   

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *