“இவள் நிச்சயமாக சரளைப்பாண்டியனுடைய கூட்டத்தைச் சேர்ந்தவளாகத்தான் இருக்க வேண்டும்!” குடமுருட்டியார் குதித்துப் பாய்ந்து சொன்னார். அவர் எப்போதும் அப்படித்தான். இனியாவைக் காஞ்சிபுரத்திற்குக் கொண்டு சென்று, மேலமாட வீதியில் உள்ள விசாரணை மன்றத்தில் நிறுத்தியிருந்தார்கள். விசாரணை அதிகாரியாக பண்பழகப் பல்லவராயர் அமர்ந்திருந்தார்.
“இந்தப் பல்லவ நாட்டின் ரகசிய உளவுப் படை உன் மீது சாற்றியிருக்கும் குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா?” என்று பண்பழகர் கேட்டார்.
பயமும், மிரட்சியும் வெளியில் தெரிய, இனியா பதில் சொன்னார்ஞ் “என் பெயர் கற்பூரவள்ளி! நான் மயிலாடுதுறையிலிருந்து வருகிறேன். கைலாசநாதர் கோவிலைக் காண விரும்பி வந்தவள் பாதை மாறிஞ்” இனியா பேசி முடிக்கும் முன்பே, தனக்கொரு பிடி கிடைத்துவிட்டது என்று குடமுருட்டியார் எகிறி அடித்தார். இடையில் குறுக்கிட்டார்.
“ம்ம்ம்… மாறி மாறிச் சொல். நேற்று நாகப்பட்டினம் என்று சொன்னார்கள். சிவசக்தி அம்மையிடம். உண்டா இல்லையா என்று கேளுங்கள்…”
பயப்படாத இனியா என்கிற கற்பூரவள்ளி தொடர்ந்தார்… “சரளைப் பாண்டியன் ஆள் என்று நிரூபிக்க என்ன வேண்டுமோ? அதை மட்டும் குடமுருட்டியார் கேட்க விரும்புகிறார் போல. நான் மயிலாடுதுறைதான். வருகிற வழியில் நாகப்பட்டினம் இருப்பதால், அப்படிச் சொல்லியிருப்பேன். அதற்காக எதிரிகளின் கூடாரத்தைச்
சேர்ந்தவள் என்று சொல்லிவிடுவதா?” இனியா மேடம் தன் பழங்காலப் பெயரைக் கற்பூரவள்ளி என்று சொல்லியிருக்க, ஊரை மாற்றிச் சொன்ன பிழையைச் சமாளித்துப் பேசினார். சிவசக்தி அருகில் நின்றிருந்த மயன் சிற்பி. கையை பிசைந்துகொண்டு நின்றார். அப்படி ஏதோ ஒரு இணைப்பு அந்த புதிதாக வந்த பெண்ணோடு ஏற்பட்டுப் போனது.
சிவசக்தி தொடர்ந்தார்… “மாண்புமிகு நீதிபதி ஐயா, குடமுருட்டியாரை ஏதாவது உருப்படியான தடயத்தைக் கொடுக்கச் சொல்லுங்கள், பார்க்கலாம்!”
“அப்படி வாருங்கள், இதற்காகத்தான் காத்திருந்தேன். கறுப்பாக இருப்பதெல்லாம் காக்கை என்று நீங்கள் நம்பலாம். ஆனால், இந்த மேதாவி குடமுருட்டி (அதில் நீங்கள் ஒரு ‘அதி’ சேர்த்துக்கொள்வதில் எனக்கு ஆட்சேபணை இல்லை) தடயம் இல்லாமல் யார் மீதும் குற்றம் சாட்டமாட்டான்!”
பேசிக்கொண்டே ஒரு செப்படி வித்தைக்காரன் போல, குடமுருட்டியார் வேகமாக நடந்து சென்று ஒரு மேஜைமீது இருந்த பட்டுத் துணியை விலக்கினார். அதற்குள் ஒரு தங்க மகுடம் வைக்கப்பட்டிருந்தது. அதில் சில வெள்ளை இறகுகள் உயரமாக நீண்டிருந்தன.
“இந்தக் கருவியை கற்பூரவள்ளி தங்கியிருந்த அறையிலிருந்து எடுத்தேன். இதில் பல விநோத சத்தங்கள் கேட்டன. ஒலி ஒளி அமைப்புகள் இருந்தன. அது மட்டும் அல்ல. நேற்று இரவு இவர் ரகசியமாக வெற்றிலை ஒன்றில் மை தடவி, இன்னொரு பெண்ணுடன் பேசியதை இந்த அதிமேதாவிக் காதால் நானே கேட்டேன். அதில் ஒரு பெண் ‘ஆன்டி’ என்று சொன்னாள். அந்த ‘ஆண்டி’ என்பது சரளைப்பாண்டியனின் மாமல்லை செயல் தளபதி ஆண்டியப்பனைத்தானே குறிக்கும். வேறென்ன, என்னுடைய மதிக்கூர்மைக்கு முன்னால் எத்தனை ஆண்டிகள் வந்தாலும் வெல்வோம், ஐயா!”
ஒரே உருட்டாக உருட்டிவிட்டு, குடமுருட்டி மிக புத்திசாலித்தனமாகப் பேசிவிட்டதாக நினைத்துத் தன் நாற்காலியில் போய் அமர்ந்தார்.
இனியா என்ன பார்க்க அனுமதித்தாரோ, அதை மட்டும்தான் பார்த்திருந்தார் குடம். ‘ஆன்டி’ ஜோக் அவரே எதிர்பாராதது. நேற்று இரவு நடந்தது இதுவே!
நேற்றிரவு இனியா சிவசக்தியிடம் பேசினார். “சிவசக்தி, நான் கிட்டத்தட்ட 1,400 வருடங்கள் முன்னாடி இருந்து வருகிறேன். நீங்கள் பதற்றம் அடைய வேண்டாம். இங்கும் நான் ஏதாவது வடிவில் வாழ்ந்து வரலாம்!”
சிவசக்தி மிகவும் புத்திசாலிதான். “வள்ளியம்மா, ஏன் என்று தெரியவில்லை. ஆனால், உங்களை எனக்குப் பிடித்திருக்கிறது. உங்கள் மீது எனக்கு ஒரு ‘மர்ம அன்பு. கடந்த காலத்தில் இருந்துதானே எதிர்காலத்திற்குப் போக முடியும்?. நீங்கள் இயற்கைக்கு மாறாக பின்னால் பயணிப்பதாகச் சொல்கிறீர்கள்? உண்மையில் நீங்கள் யார்?
விந்தையிலும் விந்தையைச் சிந்தையில் அமர வைக்க இயலவில்லை சிவசக்திக்கு.விந்தையிலும் விந்தையைச் சிந்தையில் அமர வைக்க இயலவில்லை சிவசக்திக்கு. “உங்களுக்குப் புரியவில்லை என்கிற ஒரே காரணத்திற்காக உண்மை உறங்கிவிடாது அல்லவா? அதற்காகத்தான் இந்தக் கருவியைக் கொண்டு வந்துள்ளேன். எதிர்காலத்தில் ஒரு கிளைப் பரம்பரைப் பாதையில் உங்கள் மகள் சில்வியா என்பவள் வடிவமைத்தது இது. இதன் பெயர் ‘மின்சார உதடுகள்’. இதை உங்கள் தலையில் மாட்டி, இந்த வெள்ளி உதட்டில் உங்கள் உதடுகளை இணையுங்கள்! அதன் பிறகு சில விநாடிகளில் உங்களுக்கு எல்லா நினைவுகளும் பதிவிறக்கம் ஆகிவிடும். அதற்கு முன் நான் எவ்வளவு நேரம் விளக்கம் சொன்னாலும், காது கேளாதவரிடம் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் குறித்துப் பேசுவது போலத்தான்” என்றார் இனியா.
“இளையராஜா யார் நரசிம்மரா? இன்னொருவர் என்ன, ஒரு வகை புள்ளிமானா? அவரைப் பற்றி ஏன் காது கேளாதவரிடம்… சரி, கொடுங்கள்… என்ன என்று பார்க்கிறேன். எதுவும் சிக்கல் ஆகிவிடாது அல்லவா?” பயமும் நம்பிக்கையும் ஃபிப்டி ஃபிப்டியாகக் கேட்ட வண்ணம் சிவசக்தி, நேற்றிரவு உடனே வாங்கி, அந்தத் தலைக்கவசத்தை அணிந்து கொண்டார். “சிக்கல் ஆகிவிடாதா என்பதையே நல்லதே நடக்குமா என்றுகூடக் கேட்கலாம். டபுள் நெகட்டிவ் வேண்டாமே!” நம்பிக்கை நட்டார் இனியா. “யெஸ் அஃபிர்மேட்டிவ்!” என்று ஹெல்மெட் போட்டுக்கொண்டு ராதிகாவாக மாறியிருந்த சிவசக்தி கை கட்டைவிரலை உயர்த்தியிருந்தார்.
“கனம் கோர்ட்டார் அவர்களே.. அதாவது மேன்மை தாங்கிய நீதிபதி ஐயா அவர்களுக்கு வணக்கம். இந்த மகுடம், குழந்தைகள் விளையாடும் பொம்மை. இதுதான் உண்மை!” வள்ளி ஒரே போடாக இப்படிச் சாதித்துப் போட்டபோது… “விர்ர்ர்…” என்று பாய்ந்து வந்த அம்பு ஒன்று நீதிபதி முன் இருந்த மேஜை மீது வந்து ‘சக்’கென்று குத்தி, தனது பின் பாதியை ஐந்தாறு முறை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஆட்டிவிட்டு நின்றது.



