முக்கிய அணைக்கட்டுப் பகுதிகளில் நடந்த பணிகள் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு இடையில் சிறந்த ஒத்துழைப்பை பெரும் வண்ணம் திட்டமிட்டு செயல்படுத்தியதின் விளைவு, குறைந்த செலவில் பணியை நிறைவடையச் செய்ய முடிந்தது என்றால் அது மிகையல்ல! குறிப்பிட்ட கால அளவைவிட சுமார் ஒரு வருட காலம் முக்கிய அணைக்கட்டுப் பகுதி முன்னதாக கட்டி முடிக்கப்பட்டது. கட்டுமானம் செய்ய தாமதம் ஏற்பட்டிருந்தால், அதே போல பாசனக் கால்வாய் கட்டி முடிக்க சுமார் இரண்டு வருட காலம் தாமதம் ஏற்பட்டிருந்தாலும், செலவானத் தொகை என்ற அளவில் கணக்கிடும் போது அது பெரிய இழப்பாக இருந்திருக்கும்.
அதைத் தவிர்த்து, மேற்குறிப்பிட்ட சீரிய நிர்வாகத் திறன் காரணமாக பெருமளவு தொகை சேமிப்பு ஏற்பட காரணமாக அமைந்தது என்பது கவனமாக கண்ணுற வேண்டிய விடயமாகும்.
திட்டமிட்ட தொகை-ரூபாய்
முக்கிய அணைப்பகுதி மட்டும் 48,71,500
சேமிப்பான தொகை-ரூபாய் – 11,04,000
திட்டமிட்ட தொகை-ரூபாய்
பாசனக் கால்வாய் மட்டும் 25,55,400
சேமிப்பான தொகை-ரூபாய் – +90,228
பாசனக் கால்வாய் கட்டி முடிக்க இரண்டு வருட கால தாமதம் ஆனதால் சொற்பத் தொகை மட்டுமே அதிகமானது.
சலுகைகள்:-
அணைக் கட்டுமானத்தில் ஈடுபட்ட அலுவலர்கள், அதிகாரிகளுக்கு சில சலுகைகள் அப்போது வழங்கப்பட்டன.
மேட்டூர் திட்டம் வராத ஆரம்ப காலத்தில் மேட்டூர் கிராமம் வாழத் தகுதியற்ற, ஆரோக்கிய சூழ்நிலை குறைந்த மலை மற்றும் காடுகள் சூழ்ந்த சாதாரண குக்கிராமமாக கருதப்பட்டு “ஸ்பெஷல் லோக்கல் அலவன்ஸ்” எனப்படும் “படித்தொகை” அளிக்கப்பட்டு வந்த சூழ்நிலை இருந்தது. பின்னாளில், சிறப்பு ஏற்பாடுகள் மூலம் மேட்டூர் வாழத் தகுந்த ஆரோக்கியமான நகராக உருமாற்றம் அடைந்ததினால் இந்த சிறப்பு அலவன்ஸ் பின்பு நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக இலவச வீடு, இலவச மின்சாரம், ஃபேன் மற்றும் தண்ணீர் வசதி, இலவச பிரயாண வசதி என்ற அளவில் முதலில் ஈரோட்டில் இருந்து மேட்டூருக்கு, பிறகு மேட்டூரிலிருந்து மேட்டூர் ரயில் நிலையத்திற்கும் அளிக்கப்பட்டது.
அரசு பணியாளர்களுக்கு எரிபொருள் அதன் அடக்க விலைக்கே அளிக்கப்பட்டது. இது போன்ற, பல சிறப்புத் தள்ளுபடி மற்றும் இலவச வசதி அளித்ததால் மேட்டூர் அணை கட்டுமான பிரிவுகளில் பணிபுரிந்த பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் சொந்த செலவு குறைந்த அளவில் மட்டுப்படுத்தப்பட்டது. மேலும் பணியாளர்கள் நலனை மேம்படுத்த, அவர்களின் வசதியைப் பேண அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து அவர்களை மகிழ்வுடன் வைத்துக் கொள்ள முனைந்தது மிகவும் பாராட்டத்தக்க அம்சமாகும்.
பயணிப்போம்….