மின்வாரிய ஏ.இ தேர்வு.. டிஎன்பிஎஸ்சியால் பெரும் அநீதி.. அண்ணாமலை அழுத்தமான பதிவு | EB AE Exam: Annamalai posts a strong statement calling it a grave injustice by the TNPSC

Spread the love

Tamilnadu

oi-Velmurugan P

சென்னை: கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற மின்பகிர்மான கழக உதவி மின்பொறியாளர் காலிப்பணியிடங்களுக்கான TNPSC தேர்வு முடிவுகள், கடந்த 23.01.2026 அன்று வெளியாகின. பணி நியமனங்களுக்கான கலந்தாய்வு தொடங்கும் முன்பாக, வயது வரம்பைக் காரணம் காட்டி, தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற இளைஞர்களைக் கூட தகுதி நீக்கம் செய்துள்ளார்கள். TNPSC அமைப்பின் இந்த நிர்வாகக் குளறுபடிகள் காரணமாக, கடந்த ஆறு ஆண்டுகளாக மின்சார வாரிய உதவி மின்பொறியாளர் பணிக்காகக் காத்துக் கொண்டிருந்த தகுதியான இளைஞர்கள் பாதிக்கப்பட்டிருப்பது மிகுந்த துரதிருஷ்டவசமானது என்று “வீ த லீடர்ஸ் நிறுவனர்” அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்

“வீ த லீடர்ஸ் நிறுவனர்” அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், “கடந்த 2020 ஆம் ஆண்டு, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில், உதவி மின் பொறியாளர் பணியிட நியமனங்களுக்கான TNPDCL தேர்வு, கொரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டு, பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு, நிர்வாகக் காரணங்களைக் கூறி, இந்தத் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டதாக, TANGEDCO அறிவித்தது. மேலும், TN Act No. 14 of 2022, TNPSC (Additional Functions) சட்டத்தின்படி, TNPSC மூலமாக, இந்தத் தேர்வுகள் நடைபெறும் என்றும், கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆனால், மின்பகிர்மானக் கழக உதவி மின்பொறியாளர் பணி நியமனம் தொடர்பாக, 2025 ஆம் ஆண்டு வரை, மூன்று ஆண்டுகளாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

EB AE Exam Annamalai posts a strong statement calling it a grave injustice by the TNPSC

இந்த நிலையில், கடந்த 26.07.2024 அன்று வெளியிடப்பட்ட, பொதுப்பணித்துறை (PWD) உதவி மின் பொறியாளர் காலிப் பணியிட நியமனங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்பாக, முன்பு ரத்து செய்யப்பட்ட TNPDCL உதவி மின்பொறியாளர் காலிப் பணியிடங்களில், 195 இடங்கள், பொதுப்பணித் துறை சார்பாக நடைபெற்ற தேர்வு முடிவுகள் மூலம் நிரப்பப்படும் என்று திடீர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு வயது வரம்பும் 32 என்று அறிவிக்கப்பட்டது.

இதனால், கடந்த 2020 ஆம் ஆண்டு முதல், மின்பகிர்மானக் கழகத்தில், உதவி மின்பொறியாளர் பணி நியமனத்துக்காகக் காத்துக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு, அந்தத் துறை சார்பான தேர்வுகள் ரத்து செய்து, எந்த மறு அறிவிப்பும் செய்யாமல் காத்திருக்க வைத்து விட்டு, அதே பணியிடங்களை, பொதுப்பணித்துறை சார்பான தேர்வுகள் மூலம் நிரப்ப முடிவு செய்தது, அந்த இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. குறிப்பாக, அரசின் நிர்வாகக் குளறுபடி காரணமாக, தகுதியான இளைஞர்களுக்கு வயது வரம்பில் மாபெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு தளர்வு வழங்கும் தமிழக அரசின் 13.09.2021 அன்று வெளியான அரசாணை எண் 91 ன் படி, கொரோனா பெருந்தொற்றால் அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகள் தாமதமானால், வயது உச்ச வரம்பு, 2 ஆண்டுகள் தளர்த்தப்படும். ஆனால், மின்பகிர்மானக் கழகத்தில், உதவி மின்பொறியாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது, 04.07.2022 அன்றுதான். ஏற்கனவே தேர்வுகள், 2020 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் தாமதமான நிலையில், பொதுவாக வெறும் இரண்டு ஆண்டுகள் தளர்வு என்பது எப்படிப் பொருத்தமானதாக அமையும்?

இந்த நிலையில், வயது வரம்பில் தளர்வு வேண்டும் என்ற கோரிக்கை, நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே, கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற மின்பகிர்மான கழக உதவி மின்பொறியாளர் காலிப்பணியிடங்களுக்கான TNPSC தேர்வு முடிவுகள், கடந்த 23.01.2026 அன்று வெளியாகின. பணி நியமனங்களுக்கான கலந்தாய்வு தொடங்கும் முன்பாக, வயது வரம்பைக் காரணம் காட்டி, தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற இளைஞர்களைக் கூட தகுதி நீக்கம் செய்துள்ளார்கள். TNPSC அமைப்பின் இந்த நிர்வாகக் குளறுபடிகள் காரணமாக, கடந்த ஆறு ஆண்டுகளாக மின்சார வாரிய உதவி மின்பொறியாளர் பணிக்காகக் காத்துக் கொண்டிருந்த தகுதியான இளைஞர்கள் பாதிக்கப்பட்டிருப்பது மிகுந்த துரதிருஷ்டவசமானது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) தேர்வுகள் ரத்து செய்யப்பட்டபோது, பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அரசாணை எண் 231 மூலம் தமிழக அரசு சிறப்புத் தளர்வு வழங்கியுள்ளது. அதே போல, கடந்த 2013 ஆம் ஆண்டு, இதே போன்று, நீண்ட கால பணியிட நியமனங்கள் நடைபெறாத நிலையில், விதி 91(h) மூலம், ஐந்து ஆண்டுகள் வயது வரம்பு தளர்வை, தமிழக மின்சார வாரியம் வழங்கியிருந்தது. கடந்த 2019 முதல், 2024 வரை, எந்தப் பணியிடங்களும் நிரப்பப்படாத நிலையில், இதே சூழ்நிலையில் தற்போது பாதிக்கப்பட்டிருக்கும் இளைஞர்களுக்கும், வயது வரம்பில் தளர்வு கொடுத்திருக்க வேண்டும். நிர்வாகத் தவறுகளால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு, அந்த நிவாரணத்தை மறுப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.

எனவே, தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) நடவடிக்கைகள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும். கடந்த கால முன்னுதாரணங்களைப் பின்பற்றி, நிர்வாகத் தாமதத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஒருமுறை சிறப்பு வயதுத் தளர்வு வழங்க வேண்டும். மேலும், தேர்வு நடைமுறை தொடங்கிய பிறகு கூடுதல் அறிவிப்பு என்ற பெயரில் பணியிடங்களையோ, விதிகளையோ மாற்றும் முறைகேடுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழக இளைஞர்களின் எதிர்காலம், அரசின் நிர்வாக அலட்சியத்திற்குப் பலியாக அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்” இவ்வாறு கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *