அ.தி.மு.க-வில், வேலுமணி தலைமையில் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் அணிவகுத்துள்ளனர். அமித் ஷாவுக்கு நெருக்கமானவரான சென்னையைச் சேர்ந்த பிரபல கட்டட தொழிலதிபர் வழியாக, அ.தி.மு.க-வுக்குள் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் அமித் ஷாவிற்குச் செல்கிறது. எடப்பாடியுடனும் நெருக்கமாக இருக்கிறாராம் அந்த தொழிலதிபர். இந்தச்சூழலில், ‘நீங்கள் தனியாகச் சென்றால், உங்கள் மீது ரெய்டு நடத்த வைப்பேன்.

எனக்கும் அந்த தொழிலதிபருக்கும் இடையேயான நெருக்கம் உங்களுக்குத் தெரிந்ததுதான். வீணாக என் கோபத்திற்கு ஆளாகாதீர்கள்…’ என ‘வேலுமணி அண்ட் கோ’வை எடப்பாடி மிரட்டியதாகவும், அதனால் ஆத்திரமடைந்த வேலுமணி தரப்பு தனியாக பிரிந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. கட்சிக்குள் பிளவு ஏற்பட்டதற்கு இந்த விவகாரமும் ஒரு காரணமாம்.!
சட்டமன்றத் தேர்தல் தோல்வி, தி.மு.க இளைஞர் அணி செயலர் உதயநிதியை ரொம்பவே பாதித்திருக்கிறதாம். அதிலும், தன் தந்தை ஸ்டாலின் தோல்வியடைந்ததை இப்போதுவரை உதயநிதியால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லையாம். தனது தனிப்பட்ட அரசியல் ஆலோசகரிடம் தோல்வி குறித்துப் பேசியிருக்கிறார் உதயநிதி. அப்போது, ‘பல தொகுதிகளில் உள்ளடி வேலைகள் தான் முக்கிய காரணம்’ என்று ஆலோசகர் சொல்லியிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து, மாவட்ட வாரியாக யார் யார் உள்ளடி வேலை பார்த்தார்கள் என்ற தகவலை சேகரித்துக் கொண்டிருக்கிறாராம் உதயநிதி. விரைவிலேயே மாவட்ட அளவில் பெரிய மாற்றத்துக்குத் தயாராகிறது தி.மு.க. இதனால் உள்ளடி வேலையில் ஈடுபடப் பலரும் அச்சத்தில் இருக்கிறார்களாம்.
கடந்த ஆட்சியில் தண்ணீர் துறையின் ‘திலக’ அதிகாரி, அப்போதிருந்த மாண்புமிகு உடனான நெருக்கத்தால் பவர் சென்டராக திகழ்ந்தார். அதிகாரிகள் மாறினாலும், அவர் மீது விசாரணை அமைப்புகள் சோதனை நடத்தினாலும் அவரது வளர்ச்சி மட்டும் கடந்த ஆட்சியில் குறையவே இல்லை. இந்தச் சூழலில், ஆட்சி மாற்றம் நடந்திருக்கும் நிலையில் அந்த ‘திலக’ அதிகாரியும் துறையிலிருக்கும் மொழி அதிகாரியும் தங்களுக்கு வேண்டப்பட்ட நபர்கள் உதவியுடன் ஆளும் தரப்பில் உள்ள ‘ஆனந்தமான’ மாண்புமிகுவை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.
‘அமைச்சர் யாராக இருந்தாலும் துறையை நாங்க நல்லபடியாக பார்த்துகிறோம். கூடவே, கட்சிக்கு வர வேண்டியதையெல்லாம் சரியா கொண்டுவந்து சேர்த்துவிடுகிறோம். எங்களுக்கு உங்களுடைய ஆதரவு வேண்டும்’ என்று பேசியிருக்கிறார்கள். ஏற்கெனவே ஐந்து வருடம் துறையை நாசம் செய்தது போதாதென்று இப்போது இந்த ஆட்சியிலும் பதம் பார்க்க அடி போடுகிறார்களாம் அந்த அதிகாரிகள்.
பொதுப்பணித்துறையில், சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகுவதற்கு முன்பு சில பணிகளுக்கு டென்டர் விடப்பட்டதாம். அந்த பணிகளை எடுத்த ஒப்பந்தகாரர்களிடம் மணியான அதிகாரி ஒருவர் வசூல் வேட்டை நடத்தியிருக்கிறாராம். அந்த அதிகாரி, புதிய ஆட்சியிலும் தொடர்ந்தால் நிச்சயம் அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படும் என ஒப்பந்தகாரர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்களாம்.
இந்த புலம்பலுக்கு இடையே, எம்.எல்.ஏ ஹாஸ்டலில் பராமரிப்பு பணிகள் என மாதந்தோறும் சில ஸ்விட் பாக்ஸ்களை சுருட்டி வந்த இன்ஜினீயர் ஒருவரின் தில்லுமுல்லு குறித்த ஆதாரம் கிடைத்திருக்கிறதாம். அதை பொதுப்பணித்துறை உயரதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்ற போதிலும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்பதால், துறைக்குள் அனல் கூடிக்கொண்டே போகிறது. இந்த விஷயத்தை துறைக்கு புதிய அமைச்சர் நியமிக்கப்பட்டதும், அவரிடம் எடுத்துச் சென்று நியாயம் கேட்க துறைக்குள்ளேயே சிலர் தயாராகின்றனர்.!