2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைய இருக்கிறது. இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு பணிகள் அதிதீவிரமாக நடைபெற்று வருகின்றன. எதிர்கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் நேற்று இரவு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கண்கள் கலங்க தொண்டர்கள் மத்தியில் உருக்கமாக பேசிய எடப்பாடி பழனிசாமி யின் உரை கவனத்தை ஈர்த்தது வருகிறது.

எடப்பாடி தொகுதியில் தொண்டர்களிடம் பேசிய எதிர்கட்சி தலைவர் பழனிசாமி, “அ.தி.மு.க பொதுச் செயலாளர் மற்றும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என உயரிய இந்த இரண்டு பதவிகளையும் வழங்கியது இந்த தொகுதி மக்கள் தான். மனிதனின் பிறப்பு மற்றும் இறப்புக்கு மத்தியில் மக்களுக்கு அவன் செய்த சேவை மட்டும் தான் நிலைத்து நிற்கும். நான் இந்த அளவிற்கு வளர காரணமாக இருந்த எடப்பாடி தொகுதி மக்களின் பாதங்களை தொட்டு வணங்குகிறேன். மறுபிறவியிலும் மனிதப்பிறவி எடுத்தால் எடப்பாடி தொகுதி மக்களின் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்” என கண்கள் கலங்க பேசியிருக்கிறார்.