"மீண்டும் ஸ்டாலினிடம் தமிழகத்தை ஒப்படைத்தால் நாடு தாங்காது" – இபிஎஸ், டிடிவி கூட்டுப் பிரசாரம்

Spread the love

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்து பிரசாரம் செய்தனர்.

பிரசாரக் கூட்டத்தில் முதலில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறும்போது, “2002ல் ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல் வேட்பாளராக நான் வந்தபோது இருந்த அதே ஆரவாரம் இன்றும் உள்ளது. இந்த மாவட்டத்தின் நான்கு தொகுதிகளையும் நாம் வெல்ல வேண்டும். அரசியலுக்காக எதையும் பேசும் கூட்டம்தான் திமுக கூட்டணி.

ttv dinakaran
ttv dinakaran

மு.க. ஸ்டாலின் ஒரு வீடியோ போட்டிருக்கிறார், நாளை மறுநாள் இந்தியாவின் அனைத்து மாநிலத் தொகுதிகளையும் உயர்த்துவதற்கு மசோதா தாக்கல் செய்கிறார்கள், அதை எதிர்த்துப் பேசுகிறார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இதனால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பு ஏற்படாது என்று ஏற்கெனவே சொல்லிவிட்டனர்.

ஸ்டாலினுக்குத் தோல்வி பயம் வந்துவிட்டது, எங்களைப் பற்றி குறைசொல்ல முடியாத ஸ்டாலின், டெல்லியை மிரட்டிப் பார்க்கிறார். தீயசக்தி திமுகவை அப்புறப்படுத்தி, இபிஎஸ் தலைமையில் அதிமுக ஆட்சி உருவாக வேண்டும், அதற்கு நாம் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்” என்று பேசினார்

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில் , ’’இந்த மாவட்டத்துக்குத் தனி வரலாறு உண்டு, எம்ஜிஆர், ஜெயலலிதா இரு பெரும் தலைவர்கள் இந்த மாவட்டத்தில் தேர்வுசெய்யப்பட்டு முதல்வரானார்கள். ஆண்டிப்பட்டி தொகுதியில் ஏற்கனவே எழுச்சிப் பயணத்தில் நான் உங்களைச் சந்தித்தேன், டி.டி.வி.தினகரன் குறிப்பிட்டது போல ஆண்டிப்பட்டி நகரமே அதிர்கிறது மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்திருக்கிறோம். தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம் என்பதற்கு உங்கள் ஆரவாரமே சாட்சி.

இபிஎஸ் மற்றும் டிடிவி இணைந்து பிரச்சாரம்
இபிஎஸ் மற்றும் டிடிவி இணைந்து பிரச்சாரம்

அதிமுக சார்பில் கம்பம் தொகுதியில் ஜக்கையன், போடிநாயக்கனூர் தொகுதியில் வி.டி.நாராயணசாமி, ஆண்டிப்பட்டி தொகுதியில் லோகிராஜன் ஆகியோருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். அமமுக சார்பில் பெரியகுளம் தொகுதியில் நிற்கும் டாக்டர் கே.கதிர்காமுக்கு குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். நான்கு வேட்பாளர்களையும் வெற்றி பெற வைத்து எம்ஜிஆர், அம்மா இருபெரும் தலைவர்களின் ஆசியோடு தேனி அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபியுங்கள்.

தேனி மாவட்டம் என்றாலே முல்லைப் பெரியாறு அணை. நானும் ஒரு விவசாயி, இன்றைக்கும் விவசாயம் செய்கிறேன். கடினமான தொழில், ரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உணவளிக்கும் விவசாயிகள் ஏற்றம் பெற வேண்டும் என்பதுதான் அதிமுக லட்சியம்.

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றும் முதற்கட்டமாக 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திவிட்டு, அணையைப் பலப்படுத்திவிட்டு 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அணையைப் பலப்படுத்த ஒப்பந்தம் விடப்பட்டு 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பேபி கனால் பலப்படுத்தப்பட்டது. அதற்குப் பிறகு அணையின் இரு கரைகளிலும் இருக்கும் மரங்களை வெட்டுவதற்கு முயற்சி எடுத்தோம், கேரள அரசு அனுமதிக்கவில்லை. தடுத்து நிறுத்தி நம் அதிகாரிகள் மீது வழக்கு போட்டார்கள். 

இருப்பினும் கட்டுமானப் பொருட்களை எடுத்துச்செல்ல முடியாத அளவுக்குத் தடுத்து நிறுத்தி கேரள அரசு இடையூறு செய்தது. அணையைப் பலப்படுத்தியே ஆக வேண்டும் என்பதால், நான் கேரள முதல்வரை நேரடியாகச் சந்தித்துப் பேசினேன். அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இன்றைய முதல்வர் இதைக் கண்டுக்கொள்ளவே இல்லை.

இபிஎஸ் மற்றும் டிடிவி இணைந்து பிரசாரம்
இபிஎஸ் மற்றும் டிடிவி இணைந்து பிரசாரம்

கம்யூனிஸ்ட்டோடு திமுக கூட்டணியில் உள்ளது, இதுவரை முதல்வர் ஸ்டாலின் கேரளா சென்று அம்மாநில முதல்வரைப் பார்க்கவில்லை, சந்தித்துப் பேசியிருந்தால் 152 அடியாக உயர்த்தியிருக்கலாம். அப்படி செய்தாரா?

விவசாயிகள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்பதுதான் ஸ்டாலின் எண்ணம். ஸ்டாலின் நினைத்திருந்தால் விவசாயிகள் பிரச்னைகளை கேரள முதல்வரிடம் பேசி தீர்வு கண்டிருக்கலாம். அதிமுக அரசு அதற்கு இடம் கொடுக்கவில்லை. ஸ்டாலின் அதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.

5 மாவட்ட மக்கள் மீது அக்கறை இருந்தால் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி அளவை உயர்த்தியிருக்கலாம். பென்னிகுயிக் தனது சொந்தப் பணத்தில் இந்த அணை கட்டினார், அவருக்கு அம்மா மணி மண்டபம் கட்டி கௌரவித்தார். திமுக வெளிநாட்டுக்குப் போய் அங்கு சிலை திறப்பதாகச் சொல்லி, அதற்கு பணம் கட்டாமல் புறக்கணித்தவர்தான் முதல்வர் ஸ்டாலின்.

தேர்தல் வந்தால் ஸ்டாலினுக்கு இந்தி எதிர்ப்பு, மொழிக் கொள்கை, மாநில உரிமை எல்லாமே ஞாபகம் வந்துவிடும். காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கியது. இந்தியைத் திணித்தது காங்கிரஸ். இப்போது அந்தக் காங்கிரஸுடன் திமுக கூட்டணி வைத்திருக்கிறார்கள்.

இபிஎஸ் மற்றும் டிடிவி இணைந்து பிரசாரம்
இபிஎஸ் மற்றும் டிடிவி இணைந்து பிரசாரம்

பச்சோந்தி கூட கொஞ்சநேரம் கழித்துத்தான் நிறம் மாறும், ஆனால் உடனுக்குடன் நிறம் மாறுவார் முதல்வர் ஸ்டாலின். கொள்கை பிடிப்புள்ள கட்சி என்கிறார் ஸ்டாலின். திமுக கூட்டணியில் உள்ள அத்தனை கட்சிகளுக்கும் ஒரே கொள்கையா? ஒரே கொள்கை என்றால் எதற்காக தனித்தனி கட்சி? இவர்களே புதுச்சேரி, கேரளாவில் எதிர்த்து நின்று போட்டி இடுகிறார்கள். தேர்தல் நேரத்தில் பொய் சொல்லி வாக்கு கேட்கும் முதல்வர் தேவையா?

இந்த மண்ணில் இருந்த ஒருவர் வேறு பக்கம் சென்றுவிட்டார். நம்மை விட்டு போய்விட்டார், எங்கிருந்தாலும் வாழ்க. நான் அவரைப்பற்றி பேசவில்லை.

தேனியில் கூட சட்டக்கல்லூரி கொடுத்தோம், புதிய மாவட்டம், தாலுகா, கோட்டம் எல்லாம் அதிமுக கொடுத்தது. திமுக கொள்ளைதான் அடித்தது. கலெக்‌ஷன் கமிஷன் கரப்ஷன் இதுதான் ஐந்தாண்டு காலம் திமுகவின் சாதனை” என்றார்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *