குடல் மற்றும் இரையக குடலியல் அறுவைசிகிச்சை பிரிவின் தலைவரும் முதுநிலை நிபுணருமான டாக்டர் மோகன் கூறுகையில்: “ரோபோட்டிக் அறுவைசிகிச்சையானது, அதிக துல்லியம், மேம்பட்ட கருவி கட்டுப்பாடு மற்றும் மேம்படுத்தப்பட்ட முப்பரிமாணக் காட்சிப்படுத்தல் ஆகியவற்றை வழங்கும் வகையில் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது. சிக்கலான அறுவைசிகிச்சைகளைக் கூட மருத்துவர்களால் எளிதாகச் செய்ய முடிகிறது. இத்தொழில்நுட்ப வளர்ச்சியானது எதிர்காலத்தில் ‘டெலி-சர்ஜரி’ எனப்படும் தொலைதூர அறுவைசிகிச்சைகளுக்கும் வழிவகுக்கும். இதன்படி, மருத்துவர்கள் வேறு இடத்தில் இருந்தபடியே இணையத்தின் மூலம் நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சை செய்ய முடியும்.

ரோபோ உதவியுடன் செய்யப்படும் அறுவை சிகிச்சையின் முக்கிய நன்மைகளில், அறுவை சிகிச்சையின் துல்லியம் அதிகரித்தல், இரத்த இழப்பு மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய வலி குறைதல் மற்றும் மருத்துவமனையில் தங்கும் காலம் குறைதல் ஆகியவை அடங்கும். லேப்ராஸ்கோப்பி மூலம் செய்யப்படும் பல அறுவைசிகிச்சைகளை, ரோபோட்டிக் தொழில்நுட்பத்தின் மூலம் இன்னும் தெளிவாகவும், துல்லியமாகவும் செய்ய முடியும். தொழில்நுட்பம் மேலும் வளரும்போது, பெரிய தழும்புகளற்ற, சிறிய துளைகள் மூலம் பல சிக்கலான அறுவைசிகிச்சைகளை எளிதாகச் செய்ய முடியும்,” என்றார்.
இந்த மைல்கல்லைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ரோபோ உதவியுடன் மேற்கொள்ளப்படும் மருத்துவ நடைமுறைகள் குறித்து தங்களது அனுபவங்களை முதுநிலை மருத்துவர்கள் பகிர்ந்துகொண்டனர். டாக்டர் ரமேஷ் அர்த்தநாரி மற்றும் டாக்டர் மோகன் ஆகியோருடன், குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை பிரிவின் முதுநிலை மருத்துவர்கள், டாக்டர் பிரதீப் மற்றும் டாக்டர் ஜெகதீஷ் சந்திரபோஸ், சிறுநீரகவியல் துறையில் முதுநிலை நிபுணர் டாக்டர் பால் வின்சென்ட், புற்றுநோய் அறுவைசிகிச்சை பிரிவின் தலைவர் டாக்டர் விஜய பாஸ்கர், மகளிர் நோயியல் பிரிவின் தலைவர் டாக்டர் பத்மா ஆகியோரும் கலந்துகொண்டு செய்தியாளர்களுடன் உரையாடினர்.