ஆனால், இத்தனை தியாகங்களுக்கும், நான் சுமந்த வேதனைகளுக்கும் இன்று எனக்குப் பரிசாகக் கிடைத்திருப்பது நெஞ்சில் பாய்ந்த துரோக ஈட்டி மட்டுமே. இத்தனை ஆண்டுகள் நாம் யாரை எதிர்த்து, யாருடைய மக்கள் விரோத, அராஜக ஆட்சியை வீழ்த்த இத்தனை வழக்குகளையும் ரணங்களையும் நம் உடம்பில் ஏந்தினோமோ…
இன்று அதே தீய சக்திகளுடன் கைகோர்த்து, அவர்கள் தயவோடு ஆட்சிக் கட்டிலில் அமர தலைமை முற்பட்டதைக் கண்டு என் மனம் ரத்தக் கண்ணீர் வடிக்கிறது. புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவி அம்மாவும் ஈன்றெடுத்த அரசியல் வாரிசுகள் நாம், நமக்குப் போய் இப்படியொரு எண்ணம் வரலாமா? தீய சக்தி என்று அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட திமுக-வுடன், இந்த அண்ணா திமுக எப்படி கைகோர்க்க முடியும்?

அண்ணன் எடப்பாடியார் அவர்களே…
நீங்கள் முன்மொழிந்த அந்தச் சமரச முடிவுக்குத்தான் எங்களைப் போன்ற நிர்வாகிகளும் தொண்டர்களும் எதிராக நின்றோமே தவிர, உங்களின் தலைமைக்கு ஒருபோதும் நாங்கள் எதிராக நின்றதில்லை. உங்களைத்தான் இந்த இயக்கத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளராக நாங்களெல்லாம் உயிரைக் கொடுத்து முன்னிறுத்தினோம். ஆனால், எங்களின் அத்தனை எதிர்ப்புகளையும், தொண்டர்களின் தார்மீக உணர்வுகளையும் துச்சமாகக் மதித்து, நீங்கள் எடுத்த அந்தத் தன்னிச்சையான முடிவுதான் இன்று ஒட்டுமொத்த இயக்கத்தையும் அழிவிலும் வேதனையிலும் நிறுத்தியுள்ளது. உங்களின் இந்த சந்தர்ப்பவாத நிலைப்பாட்டிற்குப் பலியாக, எத்தனையோ ரணங்களைச் சுமந்த இந்த விஜயபாஸ்கரும் என்னுடன் பயணித்த கழகத் தோழர்களும் தயாராக இல்லை.
என் உடன்பிறவா கழகத் தொண்டர்களே, இந்த இயக்கத்திற்காக என் உழைப்பையும், என் வாழ்நாளின் பெரும் பகுதியையும் கொடுத்துவிட்டேன். இன்று, இந்த இயக்கத்திலிருந்து மீளா கண்ணீருடனும் மிகுந்த மன வேதனையுடனும் விடைபெறுகிறேன். என் உயிரினும் மேலான கரூர் தொகுதி பொதுமக்களே உங்களின் சேவகனாக என் மக்கள் பயணம் என்றும் தொடரும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.