காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும், தமிழ்நாட்டுக்கான நீரை கர்நாடகா திறந்துவிடாததால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணையும் இதுவரை திறக்கப்படாததால், காவிரி நீர் பிரச்சினை மீண்டும் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்தச் சூழலில், காவிரி நீர் பகிர்வு மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலகத்தில் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து வருகின்ற ஆகஸ்ட் 3 ஆம் தேதி 13 பேர் கொண்ட குழுவுடன் முதலமைச்சர் விஜய் கர்நாடக செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகா பயணத்தில் முதலமைச்சர் விஜய்யுடன் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். மேலும் தலைமைச் செயலர், முதலமைச்சரின் தனிச் செயலாளர்கள் 1 மற்றும் 2, அட்வகேட் ஜெனரல், முதலமைச்சரின் சிறப்பு ஆலோசகர்களான ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி, நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர், தலைமைப் பொறியாளர், காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஜி. உமாபதி ஆகியோரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
கர்நாடக சட்டசபை வளாகத்தில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில் காவிரி நீர் திறப்பு, மேகதாது அணை திட்டம் மற்றும் இரு மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப் பகிர்வு தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகள் அமலில் உள்ள நிலையில், மீண்டும் அரசியல் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது அவசியமா என்ற கேள்வியை பல்வேறு எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ளன. இருப்பினும், இந்தச் சந்திப்பு காவிரி பிரச்சினையில் புதிய முன்னேற்றத்தை ஏற்படுத்துமா என்பது அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

