முதல்வரும் அவையில் இல்லை; தலைமைச் செயலாளரும் இல்லை – சபாநாயகரிடம் ரிப்போர்ட் செய்த உதயநிதி

Spread the love

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. அவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் அமர்ந்து மக்கள் பிரச்னைகள் சார்ந்து பல கேள்விகளை எழுப்புகையில் துறை செயலாளர்களான அதிகாரிகள் அவைக்கே வருவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

உதயநிதி
உதயநிதி

இதுசம்பந்தமாக அவையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ”பேரவைத் தலைவர் அவர்களே உறுப்பினர்கள் கேள்வி நேரத்தில் பல்வேறு விவகாரங்கள் சார்ந்து கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால், அதைக் கவனிக்க இங்கே துறை செயலாளர்கள் அவர்களின் இடத்தில் இருப்பதே இல்லை. முதல்வரும் இல்லை. தலைமைச் செயலாளரும் அவையில் இல்லை” என்றார்.

உடனே எழுந்த அமைச்சர் ஆதவ், ”முன்பு பேரவை நிகழ்வுகள் லைவ் செய்யப்பட்டதில்லை. இப்போது லைவ் கொடுக்கிறோம். அவைக்குப் பக்கத்திலேயே வார் ரூம் அமைத்திருக்கிறோம். அதிகாரிகள் அங்கே அமர்ந்து எல்லா நிகழ்வுகளையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்” என்றார்.

இதற்குப் பதிலளித்த முன்னாள் அமைச்சர் நேரு, “முன்பு வெளியில் பொது மக்களுக்குதான் லைவ் கொடுக்கப்படவில்லை. இங்கே உள்ளே லைவ் அவுட் கொடுக்கப்படத்தான் செய்தது. அப்படியிருந்தும் அதிகாரிகள் அவைக்குள் அவர்களின் மாடத்தில் அமர்ந்திருக்கத்தான் செய்வார்கள். துறை அதிகாரிகள் இங்கே இருந்து நோட் எடுக்க வேண்டும். இப்போது முதல்வரும் அவையில் இல்லை. தலைமைச் செயலாளரும் அவையில் இல்லை” என்றார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

இந்த விவகாரத்துக்குப் பதிலளித்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி பிராபகர், “திமுக ஆட்சியிலும் அவையில் இந்தப் பிரச்னை வந்திருக்கிறது. அப்போதைய அவை முன்னவர் துரைமுருகனும் சபாநாயகர் பழனிவேல் ராஜனும் கூட இதைப் பற்றி பேசியிருக்கின்றனர். முன்பும் இந்தப் பிரச்னை நடந்திருக்கிறது. இது சரி செய்யப்படும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *