முதல்வர் துறையில் ரூ.45 லட்சம் டெண்டர் முறைகேடு? அம்பலப்படுத்திய அறப்போர்..! – Kumudam

Spread the love

டெண்டருக்கு முன்பே திறக்கப்பட்ட சிலை?

பெருங்களத்தூர் மேம்பாலம் அருகே அசோகா தூண் சிலை ஒன்று அமைக்கப்பட்டு, ஜூலை 29-ம் தேதி திறக்கப்பட்டதாக அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது. அமைச்சர் சரத்குமார் மற்றும் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்திரன் ஐஏஎஸ் ஆகியோர் பங்கேற்ற நிகழ்வு தொடர்பான பதிவுகளும் சமூக வலைதளங்களில் வெளியானதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. ஆனால், அந்த சிலையை நிறுவுதல், சுற்றுப்புறத்தை அழகுபடுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கான டெண்டர் ஆகஸ்ட் 6-ம் தேதிதான் கோரப்பட்டதாக அறப்போர் இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது, சிலை அமைக்கப்பட்டு திறப்பு விழாவும் நடைபெற்ற பிறகே அதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கான டெண்டர் மதிப்பு ரூ.27.30 லட்சம் எனவும் அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.

Image

‘Save Water’ சிலையிலும் சர்ச்சை

இதேபோல், சிட்லப்பாக்கம் ஏரி அருகே உள்ள ரவுண்டானாவில் ‘Save Water’ என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் மற்றொரு சிலை அமைக்கப்பட்டதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்த சிலை ஆகஸ்ட் 10-ம் தேதி திறக்கப்பட்ட நிலையில், அதற்கான டெண்டரும் ஆகஸ்ட் 6-ம் தேதிதான் வெளியிடப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்தப் பணியின் மதிப்பு ரூ.18.60 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பணிகளையும் சேர்த்தால் மொத்த மதிப்பு சுமார் ரூ.45.90 லட்சம் ஆகிறது.

‘முன்கூட்டியே ஒப்பந்ததாரர் முடிவு?’

டெண்டர் நடைமுறைகள் முடிவடைவதற்கு முன்பே பணிகள் செய்யப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக அறப்போர் இயக்கம் கூறியுள்ளது.

குறிப்பிட்ட ஒப்பந்ததாரரிடம் முன்கூட்டியே பணியை ஒப்படைத்து, அதன் பிறகு டெண்டர் நடத்தப்பட்டதுபோல் ஆவணங்கள் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் அந்த அமைப்பு சந்தேகம் தெரிவித்துள்ளது.

மேலும், போட்டி முறையாக நடைபெற்றதா? குறைந்த விலைப்புள்ளி அடிப்படையில் ஒப்பந்தம் வழங்கப்பட்டதா? டெண்டர் நடைமுறைகள் அனைத்தும் விதிகளின்படி பின்பற்றப்பட்டனவா? என்பது குறித்து விசாரணை தேவை என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Image

565 டெண்டர்கள் குறித்து கேள்வி

தாம்பரம் மாநகராட்சியின் டெண்டர் நடைமுறைகள் குறித்தும் அறப்போர் இயக்கம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த நான்கு மாதங்களில் 565 டெண்டர்கள் கோரப்பட்டதாகவும், அவற்றில் ஒரே ஒரு டெண்டர் மட்டுமே ‘Award of Contract’ என்ற நிலையை அடைந்ததாக இணையதளத்தில் காணப்படுவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

309 டெண்டர்கள் ‘To Be Opened’ நிலையிலும், 194 டெண்டர்கள் ‘Bid Opening’ நிலையிலும், 26 டெண்டர்கள் ‘Technical Evaluation’ நிலையிலும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரும்பாலான டெண்டர்களின் தற்போதைய நிலை மற்றும் அவற்றில் ஒப்பந்தங்கள் எவ்வாறு வழங்கப்படுகின்றன என்பது வெளிப்படையாக தெரியவில்லை என அறப்போர் இயக்கம் விமர்சித்துள்ளது.

முதலமைச்சர் விஜய்க்கு அறப்போர் இயக்கம் கோரிக்கை

தவெக ஆட்சியில் ஊழலை ஒழிப்பதாக முதலமைச்சர் விஜய் கூறியுள்ள நிலையில், இந்தக் குற்றச்சாட்டின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

Image

குறிப்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும், முறைகேடு உறுதி செய்யப்பட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட பணிகளுக்கான தொகை ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்தால் அதுகுறித்தும் ஆய்வு செய்து, அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருந்தால் பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிலை அமைக்கும் பணிகள் அவசரப் பணிகளாக கருதப்பட முடியாத நிலையில், முறையான டெண்டர் நடைமுறைகளை பின்பற்றிய பிறகே பணிகள் தொடங்கியிருக்க வேண்டும் என்பதே அறப்போர் இயக்கத்தின் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *