முதல்வர் விஜய்க்கு தெரிந்து நடக்கிறதா.. சென்னைக்கு அழைத்த அதிகாரி யார்? அன்புமணி கேள்வி | Is this happening with CM Vijay’s knowledge? Who is the official that summoned buses to Chennai?

Spread the love

Tamilnadu

oi-Velmurugan P

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு தெரிந்து நடக்கிறதா? இல்லை அவருக்கு தெரியாமல் நடக்கிறதா? என்பது தெரியவில்லை. தேவையில்லாமல் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட பேருந்துகள் அனைத்தையும் உடனடியாக திரும்பிச் செல்ல ஆணையிட வேண்டும். புதிய பேருந்துகளை தேவையில்லாமல் சென்னைக்கு அழைத்து வர அறிவுறுத்திய அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களின் 52-ஆம் பிறந்தநாளையொட்டி, புதிய பேருந்துகள் இயக்கத் தொடக்கவிழாவுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னை கொண்டு வரப்பட்ட 300 அரசுப் பேருந்துகள் எந்தப் பயன்பாடும் இல்லாமல் மூன்றாவது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியா கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டை சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் தேவையின்றி பேருந்துகளை இயக்கி எரிபொருளை வீணாக்குவது கண்டிக்கத்தக்கது.

Is this happening with CM Vijay s knowledge Who is the official that summoned buses to Chennai

தமிழ்நாட்டில் மொத்தம் 8 போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. மாநகரப் போக்குவரத்துக்கழகம், விரைவுப் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றின் தலைமை அலுவலகங்கள் சென்னையில் உள்ளன. மீதமுள்ள 6 போக்குவரத்துக் கழகங்கள் 24 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிதாக வாங்கப்பட்ட 300 பேருந்துகளின் தொடக்கவிழா கடந்த 22-ஆம் தேதி முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி சென்னையில் நடைபெறவுள்ளதாகவும், அதற்காக அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களும் புதிய பேருந்துகளை சென்னைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழகங்களின் உயரதிகாரிகளுக்கு வாய்மொழி ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, புதிதாக தொடங்கி வைக்கப்படவுள்ள 300 பேருந்துகளில் மாநகர மற்றும் விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் தவிர மீதமுள்ள அனைத்தும் நாகர்கோயில், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 24 நகரங்களில் இருந்து கடந்த 22-ஆம் தேதி சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால், 22-ஆம் தேதியும், 23-ஆம் தேதியும் தொடக்க விழா நடத்தப்படாத நிலையில், 300 புதிய பேருந்துகளும் சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வளாகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பேருந்துக்கும் இரு ஓட்டுனர்கள், ஒரு நடத்துனர் வீதம் மொத்தம் 900 ஊழியர்களும் சென்னைக்கு வந்துள்ளனர்.

புதிய பேருந்துகளின் இயக்கம் எப்போது தொடங்கி வைக்கப்படும் என்பது தெரியவில்லை. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட ஓட்டுனர்களும், நடத்துனர்களும் தங்குவதற்கு இடமும், உணவும் இல்லாமல் கடந்த இரு நாட்களாக தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தக் குழப்பமும், தொழிலாளர்களின் அவதியும் இன்னும் எத்தனை நாட்களுக்கு தொடரும் என்று தெரியவில்லை.

ஒரு பேருந்தை ஒரு முறை சென்னைக்கு எடுத்து வந்து மீண்டும் எடுத்துச் செல்வதற்கு குறைந்தது ரூ.15 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செலவாகும். தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்தப் பேருந்துகள் எந்தப் பயன்பாடும் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால், அதனால் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பு இன்னும் பல மடங்கு அதிகமாக இருக்கும். ஏற்கனவே போக்குவரத்துக் கழகங்கள் கடும் இழப்பில் இயங்கி வரும் நிலையில், இது போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதல் சுமையையே ஏற்படுத்தும்.

நாடே எரிபொருள் தட்டுப்பாட்டால் திணறிக் கொண்டிருக்கும் நிலையில் 300 பேருந்துகளை வீணாக பல நூறு கி.மீ தொலைவுக்கு இயக்குவது ஏற்றுக்கொள்ளவே முடியாத செயலாகும். கடந்த காலங்களில் புதிய பேருந்துகள் தொடங்கி வைக்கப்படும் போது சில மண்டலங்களில் இருந்து மட்டும் பெயரளவுக்கு வரவழைத்து விழாவை நடத்துவது தான் வழக்கம். இப்போது 300 பேருந்துகளை தேவையின்றி சென்னைக்கு வரவழைத்திருக்கக் கூடாது.

இவை அனைத்தும் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு தெரிந்து நடக்கிறதா? இல்லை அவருக்கு தெரியாமல் நடக்கிறதா? என்பது தெரியவில்லை. தேவையில்லாமல் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட பேருந்துகள் அனைத்தையும் உடனடியாக திரும்பிச் செல்ல ஆணையிட வேண்டும். புதிய பேருந்துகளை தேவையில்லாமல் சென்னைக்கு அழைத்து வர அறிவுறுத்திய அதிகாரிகள் யாராக இருந்தால் அவர்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *