முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதிக்கு ஜாக்பாட்; முதல் கட்டமே ரூ.1,013 கோடி – முழு விவரம் தெரியுமா?

Spread the love

தமிழக முதல்வரும், பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான விஜய், தனது எம்.எல்.ஏ அலுவலக திறப்பு விழாவின் போது தொகுதி குறித்து ஆய்வு செய்ததன் அடிப்படையில், பெரம்பூர் தொகுதி வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

முதற்கட்டமாக (Phase-1) ரூ.1,013 கோடி மதிப்பிலான 50 திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. இதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் (DPR) தயாரிக்கும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதுடன், அனைத்து பணிகளையும் மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரே ஒரு சட்டமன்றத் தொகுதிக்காக ரூ.1,013 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக கவனத்தை ஈர்த்துள்ளது. முக்கியமாக, இது முதல் கட்டத் திட்டங்கள் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதற்கட்ட திட்டங்களில்,

* நகர்ப்புற உள்கட்டமைப்பு – 22 திட்டங்கள் – ரூ.211 கோடி

* வீட்டு வசதி மேம்பாடு – 3 திட்டங்கள் – ரூ.544 கோடி

* குடிநீர் மற்றும் சுகாதாரம் – 9 திட்டங்கள் – ரூ.88 கோடி

* பொது பயன்பாட்டு வசதிகள் – 11 திட்டங்கள் – ரூ.160 கோடி

* திறன் மேம்பாடு மற்றும் உயர்கல்வி – 5 திட்டங்கள் – ரூ.10 கோடி

என மொத்தம் 50 திட்டங்கள் ரூ.1,013 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளன.

எம்.எல்.ஏ நிதியில் ரூ.3 கோடி மதிப்பிலான மக்கள் நலத் திட்டங்கள்

இதற்கிடையே, பெரம்பூர் தொகுதிக்கான தனது முழு எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ.3 கோடியை பயன்படுத்துவது தொடர்பாக, சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி.எஸ். சமீரனுக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் இடம்பெற்றுள்ள முக்கிய திட்டங்கள்:

பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்

ரூ.50 லட்சம் செலவில் 6 நவீன பேருந்து நிறுத்தங்கள்

எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, சிட்கோ நகர், எஸ்.எம். நகர் (2 இடங்கள்), எம்.கே.பி. நகர் மற்றும் வியாசர்பாடி மேம்பாலம் சந்திப்பு ஆகிய பகுதிகளில் CCTV கேமரா, Wi-Fi வசதி மற்றும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை இணைப்புடன் பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்படவுள்ளன.

விளையாட்டு வசதிகள் மேம்பாடு

* மேயர் கிருஷ்ணமூர்த்தி நகரில் ரூ.50 லட்சம் மதிப்பில் விளையாட்டு வளாகம்.

* அம்பேத்கர் கலைக் கல்லூரியில் ரூ.25 லட்சம் செலவில் கூடைப்பந்து மைதானம், கிரிக்கெட் பிட்ச்கள், கபடி மைதானம் உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன. புதிய விளையாட்டு உபகரணங்களும் வாங்கப்பட உள்ளன.

சுகாதாரத் திட்டங்கள்

* சத்தியமூர்த்தி நகரில் ரூ.50 லட்சம் மதிப்பில் டயாலிசிஸ் மையம் அமைக்கப்பட உள்ளது.

தொழிலாளர் நலன்

* எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் ரூ.25 லட்சம் செலவில் கிக்-வொர்க்கர்களுக்கான ஓய்வு மையம் (Gig Workers’ Lounge) அமைக்கப்படுகிறது.

கல்வி மற்றும் குழந்தைகள் நலன்

* அம்பேத்கர் கல்லூரியில் ரூ.50 லட்சம் செலவில் நூலகம் மற்றும் படிப்பு மையம்.

* அங்கன்வாடி மையங்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் தேவையான உபகரணங்கள் வாங்கப்படவுள்ளன.

இந்த அனைத்து பணிகளும் உடனடியாக தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வடசென்னைக்கு ஒதுக்கப்பட்டதை விட பெரம்பூருக்கே அதிகம்!

கடந்த திமுக ஆட்சியில் வடசென்னை வளர்ச்சித் திட்டங்களுக்காக மொத்தமாக சுமார் ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது, பெரம்பூர் தொகுதிக்கு மட்டும் முதற்கட்டமாக ரூ.1,013 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வடசென்னை வளர்ச்சியின் மையமாக பெரம்பூர் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முதற்கட்டத்திலேயே ஆயிரம் கோடி ரூபாயை தாண்டிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டங்களில் மேலும் பல திட்டங்கள் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பெரம்பூர் மக்களிடையே அதிகரித்துள்ளது.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *