“முதல் குழந்தை முதல் குழந்தைதான்; 10 வருஷம் கழிச்சு அதுக்கு பார்ட் 2னு பெயர் வைப்போமா?” – ராமராஜன் கலகல! | actor ramarajan birthday special update and his new movie shoot update exclusively

Spread the love

கிராமத்து நாயகன் ராமராஜனின் பிறந்த நாள் நாளை (அக்டோபர் 8-ம் தேதி) வருகிறது. தமிழ் சினிமாவின் கதாநாயகன்களில் “வெள்ளிவிழா’ நாயகனாக இப்போதும் பேசப்படுகிறார். கடந்த 2024ல் ‘சாமானியன்’ படத்தின் மூலம் தனது ரீ என்ட்ரியைத் தொடங்கியவர், இப்போது அடுத்தப் பாய்ச்சலுக்கு ரெடியாகி வருகிறார். 25-வது தடவையாக இளையராஜாவோடு மீண்டும் கைகோத்திருக்கிறார். ராமராஜன், நாளை தனது 66-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

ராமராஜன், இளையராஜா

ராமராஜன், இளையராஜா

நடிகராக 46-வது படத்தை ஆரம்பிக்க உள்ள ராமராஜன், இயக்குநராகவும் பல படங்கள் இயக்கியவர். ‘மண்ணுக்கேத்த பொண்ணு’, ‘மருதாணி’, ‘ஹலோ யார் பேசுறது’, ‘சோலை புஷ்பங்கள்’, ‘ஒன்று எங்கள் ஜாதியே’, ‘கோபுர தீபம்’, ‘விவசாயி மகன்’, ‘சீறிவரும் காளை’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார்.

படத்திலிருந்து..

படத்திலிருந்து..

ராமராஜன் படங்களின் பாடல்கள் இப்போது பலரின் ஆல்டைம் ஃபேவரிட் ஆக இருக்கின்றன. ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு இணையாக பல வெற்றிப் பாடல்களை ராமராஜனுக்கு இசைத்துள்ளார் இளையராஜா. ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’, ‘கரகாட்டக்காரன்’, ‘செண்பகமே செண்பகமே’, ‘ராசாவே உன்னை நம்பி’, ‘ஊருவிட்டு ஊரு வந்து’ என இளையராஜா- ராமராஜன் காம்பினேஷன் ஹிட் படங்களின் பட்டியல் நீளமானது. பல்வேறு இசையமைப்பாளர்களிடம் பணியாற்றிய ராமராஜன், இளையராஜாவுடன் மட்டும் 25 படங்களில் இணைந்திருக்கிறார். இந்தக் கூட்டணியின் 25-வது படத்திற்கு ‘கடவுள் தந்த பரிசு’ என டைட்டில் வைத்துள்ளனர். புதுமுக இயக்குநர் காசிமாயன் கதை, திரைக்கதை எழுதி, இயக்குகிறார். நகைச்சுவை பகுதியை ராஜகோபாலும், படத்தின் வசனத்தை ராஜகோபால், எம்.அடைக்கலம் இருவரும் சேர்ந்தும் எழுதுகின்றனர். படத்தின் ஹீரோயின் மற்றும் நடிகர்கள் தேர்வு பரிசீலனையில் உள்ளது. ராமராஜனுடன் செந்தில், கோவை சரளா கூட்டணியும் இணைந்து காமெடியில் கலக்க உள்ளது. இந்தப் படத்திற்கான பாடல் கம்போஸிங்கை இளையராஜா தொடங்கிவிட்டார். பாடல்கள் ரெடியான பிறகு படப்பிடிப்புக்கு கிளம்புகின்றனர்.

ஒருமுறை ராமராஜனை விகடனுக்காக நேர்காணல் செய்திருந்தேன். அப்போது அவரிடம் ,“இனி ஹீரோவா நடிப்பேன்னு சொன்னதாலதான்.. இடைவெளி ஆனதா?”’ என்ற கேள்வியை கேட்டதும், சட்டென அவர் சொன்ன பதில் ஹைலைட்.

”நான் ஹீரோவாகத்தான் நடிப்பேன்னு சொன்னதா சொல்றீங்க… ஆனா, ஹீரோவா நடிக்கறது சாதாரண வேலை இல்ல. ரொம்ப ரொம்ப சிரமமானது. ஒண்ணாவது ரீல்ல இருந்து 14-வது ரீல் வரை ஹீரோ இருந்தாகணும். ஓபனிங் ஸாங் பாடியாகணும், ஃபைட் பண்ணியாகணும். என் குடும்பத்தை காட்டியாகணும்… அவங்க குடும்பத்தைக் காட்டியாகணும்னு பெரும் வேலை. லவ்வுக்கு சண்டை வரும்.. டூயட் பாடணும்.. இப்படி 14 ரீல்லேயும் ஹீரோ வருவான். என்னை பொறுத்தவரைக்கும் அமையும்போது அமையும். ‘கரகாட்டக்காரன்’ கொஞ்சமும் டென்ஷன் இல்லாமல் எடுத்த படம். ஆனா, அதை பார்ட் 2 எடுக்கறது பத்தி பேச்சு வந்ததும், வேணாம்னு சொல்லிட்டேன். எந்தப் படத்தையும் `பார்ட் 2′ பண்றதுல விருப்பமும் இல்ல! நமக்கு ஒரு குழந்தை பிறந்தால் அது முதல் குழந்தைதான். மறுபடியும் பத்து வருஷம் கழிச்சு, அந்த குழந்தைக்கு பார்ட் 2 னு பெயர் வைப்போமா?!” என்றார் கலகலப்புடன்.

வழக்கமாக தனது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடும் ராமராஜன், நாளை சென்னையில் சிம்பிள் அண்ட் ஹம்பிளாக கொண்டாட திட்டமிட்டுள்ளார். ரசிர்களையும் சந்திக்கும் ஐடியாவில் உள்ளார் என்கிறது அவர் தரப்பு.

நாளை பிறந்த நாள் காணும் ராமராஜனுக்கு விகடனின் வாழ்த்துகள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *