India
oi-Nantha Kumar R
போபால்: மத்திய பிரதேசத்தில் எந்த நிறுவனத்திலும் வேலை செய்யாமல் மாதம் ரூ.2.80 லட்சம் சம்பளம் வாங்கியதாக கூறி போலி ஆவணங்களை கூறி பணிக்கு சேர்ந்த ஒருவர் புதிய நிறுவனத்தில் சிஇஓ பதவி வரை சென்று திடீரென்று ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமாவால் போலி ஆவணங்களில் பணிக்கு சேர்ந்தது அம்பலமானதோடு, தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன நடந்தது? என்பது பற்றி பார்க்கலாம்.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் ஸ்ரீதுல்ஜா பவானி ஆட்டோமொபைல்ஸ் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 2025 ஆகஸ்ட் 20ம் தேதி தேவேந்திர குமார் துபே என்பவர் பணிக்கு சேர்ந்தார். அந்த நிறுவனத்தின் துணை தலைவராக பொறுப்பேற்றார்.
தேவேந்திர குமார் பணிக்கு சேரும்போது ‘லேண்ட்மார்க்’ குழுமத்தில் சீனியர் பொஷிஷனில் பணியாற்றி வந்ததாகவும், மாத சம்பளமாக ரூ.2.80 லட்சம் பெற்றதாகவும் கூறி அதற்கான சான்றிதழ்களையும், சம்பளம் தொடர்பான வங்கி கணக்கு ஆவணங்களையும் வழங்கினார். அதனை பார்த்து தான் ஸ்ரீதுல்ஜா பவானி ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் அவருக்கு துணை தலைவர் பதவி கொடுத்தது.
இந்த பொறுப்பில் தேவேந்திர குமார் துபேவின் செயல்பாடு சிறப்பாக அமைந்தது. இதனால் அந்த நிறுவனம் தேவேந்திர குமார் துபேவிற்கு புரோமோஷன் வழங்கியது. அவருக்கு அந்த நிறுவன குழுமத்தின் சிஇஓ பொறுப்பை வழங்கியது.இந்த பொறுப்பிலும் தேவேந்திர குமார் துபே சிறப்பாக செயல்பட்டார். மொத்தம் 9 மாதங்கள் வரை அந்த நிறுவனத்தில் பணியாற்றிய அவர் திடீரென்று ராஜினாமா செ்தார்.
2026 மே மாதம் தனது பணியை ராஜினாமா செய்வதாக தேவேந்திர குமார் துபே அறிவித்தார். இதையடுத்து அவருக்கு வழங்க வேண்டிய செட்டில்மெண்ட் தொகை கணக்கீடு செய்யப்பட்டது. நிறுவனத்தில் ‘எச்ஆர்’ டீமமை சேர்ந்தவர்கள் அவரது முந்தைய நிறுவனத்தை தொடர்பு கொண்டு சம்பள சான்று உள்பட பிற விவரங்களை ஆய்வு செய்தனர். தேவேந்திர குமார் துபேவின் முந்தைய நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசினர்.
அப்போது தான் தேவேந்திர குமார் யாதவ் அந்த நிறுவனத்தில் வேலை எதுவும் செய்யவில்லை என்பதும், ‘லேண்ட்மார்க் குழுமத்தில் அவருக்கு மாதம் ரூ.2.80 லட்சம் சம்பளம் வழங்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது. இதனால் எச்ஆர் டீம் அதிர்ச்சியில் உறைந்தது. அதுமட்டுமின்றி தேவேந்திர குமார் யாதவ் எந்த நிறுவனத்திலும் வேலை செய்யாமல் போலி ஆவணங்களை சமர்ப்பித்து நிறுவனத்தில் பணி பெற்று சிஇஓ பதவியை பெற்றது தெரியவந்தது.
இதுதொடர்பாக ஸ்ரீதுல்ஜா பவானி ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் குவாலியரில் உள்ள குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தது. போலீசார் வழக்கப்பதிவு செய்து தேவேந்திர குமார் துபேவை அதிரடியாக கைது செய்தனர். இவர் கான்பூரில் பதுங்கி இருந்தபோது அவரை போலீசார் வளைத்து பிடித்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தேவேந்திர குமார் துபே எப்படி வங்கி ஆவணங்கள், பணி அனுபவ சான்று என்று போலியாக ஆவணங்களை ரெடி செய்தார்? என்பது புரியாத புதிராக உள்ளது. தேவேந்திர குமார் துபேவின் பின்னணியில வேறு கும்பல் இருக்கலாம்? என்ற சந்தேகம் உள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த தேவேந்திர குமார் துபேவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவெடுத்துள்ளனர். தேவேந்திர குமார் துபே அதே நிறுவனத்தில் வேலை செய்திருந்தாலோ அல்லது அவரது நிறுவன எச்ஆர் முந்தைய நிறுவனத்தை தொடர்பு கொள்ளாமல் இருந்தாலோ அவர் தப்பித்து இருப்பார். ஆனால் எச்ஆரின் ஒரு போன்கால் அவரது ஏமாற்று வேலைகளை உறுதிசெய்து சிறையில் தள்ளி உள்ளது.