
“ஆயிரம் வாசல் இதயம்…அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்” கண்ணதாசனின் இந்த வரிகள் தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் தற்போதைய நிலைக்கு பொருந்திப் போகிறது. ‘ஏற்கெனவே கொளத்தூர் தோல்விக்குப் பிறகு, வருத்தத்தில் இருக்கும் ஸ்டாலின், த.வெ.க. தரும் தொடர் மனஉளைச்சல்களால் உடலளவிலும் மனதளவிலும் மேலும் சோர்வடைந்துவிட்டார்.
அதன் விளைவாகத்தான், முப்பெரும் விழாவே தள்ளிப்போனது, கிட்டத்தட்ட அவர் ரெஸ்ட் எடுக்கும் மூடுக்கு போய்விட்டார்’ என்று அறிவாலயத்தில் இருந்து வரும் அலாரம்தான் உடன்பிறப்புகளை கிடுகிடுக்க வைக்கும் அதிர்ச்சி தகவல்!
இதுகுறித்து தி.மு.க. சீனியர் ஒருவரிடம் பேசினோம். “முப்பெரும் விழாவை அரிதினும் அரிதாக தள்ளிவைத்திருக்கிறது தி.மு.க தலைமை. செப்டம்பர் 15ம் தேதி வரும் தி.மு.க நிறுவனர் அண்ணாவின் பிறந்த நாளானது, ஒவ்வொரு ஆண்டும் அக்கட்சி சார்பில் முப்பெரும் விழாவாக, மிக விமரிசையாக உணர்வுப்பூர்வமாக கொண்டாடப்படும். சொல்லப்போனால், இந்த விழா என்பது திமுகவின் ஆன்மாவைப் போன்றது.
ஆனால் இந்த ஆண்டு, தேதி அறிவிக்கப்படாமல் விழா தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவிக்கக்கூட ஸ்டாலின் செல்லவில்லை. இதற்கு காரணமாக ஸ்டாலினுக்கு வைரல் ஃபீவர் என சொல்லப்பட்டாலும், அதற்குப் பின்னால் வேறு சில விஷயங்களும் இருக்கின்றன.
தேர்தல் தோல்விகள் தி.மு.கவுக்குப் புதிதல்ல. 2011 தேர்தலில் எதிர்க்கட்சி வரிசையில் திமுகவால் உட்கார முடியவில்லை. இன்று அப்படி அல்ல. ஆனால், பொதுவெளியில் பலமான எதிர்க்கட்சி என சொல்லப்பட்டாலும், சட்டசபையில் பலவீனமான எதிர்க்கட்சியாக அக்கட்சி இயங்கிவருவது ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக,செப்டம்பர் 7 அன்று முதல்வர் விஜய்,திமுக மீது வைத்த குற்றச்சாட்டு,ஸ்டாலினை மிகவும் பாதித்திருக்கிறது. அந்த உரையின் போது அவர் சர்க்காரியா கமிஷன் மற்றும் மிசா குறித்து சபையில் பதிவு செய்ததும், அவரது உடல்மொழியும் ஸ்டாலினை மிகவும் மனம் நோகடித்திருக்கிறது.
ஒரு ஃப்ளாஷ்பேக்… 2001ல் ஜெயலிதா முதல்வராக இருந்தபோது, மேம்பால ஊழல் வழக்கில் கருணாநிதி ஸ்டாலின் உட்பட 11 பேர் கைதுசெய்யப்பட்டனர். அப்போது, திமுகவினர் பெரியளவில் போராட்டத்தை முன்னெடுக்கவே ஜாமினில் அனைவரையும் விடுதலை செய்ய முன்வந்தது அரசு. இதே காலகட்டத்தில்தான் மாஜி அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் தம்பி செவன் ஸ்டார் தேவராஜன் விளம்பரப் பலகைகளை வைப்பதற்காக மாநகராட்சியின் முன் அனுமதியின்றி மரக்கிளைகளை வெட்டினார் என்பதற்காக, தேவராஜன் மீது உரிமைமீறல் பிரச்னையை கொண்டுவந்தார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. இது சபையில் புயலைக் கிளப்பவே, எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்தது தி.மு.கழகம் தலைமைச் செயலகம் முன்பு, திமுக எம்.எல்.ஏக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு ஜெ. அரசை ஸ்தம்பிக்க வைத்தனர். இன்னொரு சந்தர்ப்பத்தில் சபாநாயகருக்கு எதிராக, போட்டி சட்டசபை நடத்தி அதிரடி காட்டினர்.
ஆனால், இப்போதைய சட்டசபையில் அப்படி எதையும் தி.மு.க செய்யவில்லை. குறிப்பாக, முதல்வர் பதிலுரை அன்று முதல்வருக்கு எதிராக வலுவான எந்த போராட்டத்தையும் திமுக முன்னெடுக்கவில்லை. இதுவும் ஸ்டாலினை மிகவும் பாதித்திருக்கிறது. ‘அப்பாவைக் காணோம்’, ‘கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டுட்டாங்க’ என முதல்வர் விஜய் இறங்கி அடித்தபோதுகூட அதை கடந்துபோன ஸ்டாலினால், சமீபத்தில் சட்டசபையில் நடந்த விவகாரங்களை ஜீரணிக்க முடியவில்லை. தற்போதெல்லாம் அவர் இரவு இரண்டு மணிவரை சோஷியல் மீடியாக்களை உற்று நோக்குகிறார். அதில் தன்னையும், திமுகவையும் த.வெ.க.வினர் ட்ரோல் செய்வதை அவரால் சகஜமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதுகுறித்து எல்லாம் தன் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் சீறியிருக்கிறார் ஸ்டாலின். ‘இப்படியே போனால் கட்சியின் எதிர்காலம் என்னவாகும்? எனவும் முகம் சிவந்திருக்கிறார். ஏற்கெனவே கூட்டணி பலம் இல்லாமல் திமுக திணறிவரும் நிலையில், மத்தியில் பா.ஜ.கவுடன் கரம் கோக்கலாமா அல்லது காங்கிரஸ் பாஜக அல்லாத மூன்றாவது அணியை அமைக்கலாமா எனவும் யோசனையில் இருக்கிறார் ஸ்டாலின்.
இந்த நிலையில் கட்சி இவ்வளவு வீக்காக இருந்தால் யார் நம்மை மதிப்பார்கள் என்பதுதான் ஸ்டாலின் எழுப்பும் கேள்வி. இப்படியாக உணர்ச்சிவசப்பட்ட ஸ்டாலின், ‘இனி எந்த நிகழ்ச்சிக்கும் என்னை அழைக்காதீர்கள். அனைத்திற்கும் உதயநிதியே தலைமை தாங்கட்டும். நான் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொள்கிறேன். தேவைப்படும்போது அனைத்து நிகழ்ச்சிகளையும் முன்னின்று நடத்துகிறேன்’ என ததும்பிய குரலில் சொன்னதாக சொல்லப்படுகிறது.
இதை குடும்ப உறுப்பினர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு ஸ்டாலின் ‘இடைத்தேர்தல் பணிகளை எல்லாம் முடுக்கிவிட்டிருக்கிறேன். கட்சிப் பணிகளிலிருந்து விலகிக்கொள்ளவில்லை. சில நாட்கள் ஒதுங்கிக்கொள்கிறேன்’ என சொல்லியிருக்கிறார். முன்பெல்லாம் சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள ஸ்டாலின் வீட்டில் நிர்வாகிகள், மாசெக்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் அவரை உடனடியாக சந்திக்கலாம்.
ஸ்டாலின் முதல்வரான பிறகு இந்த அணுகுமுறை மாறி, முன் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அவரை சந்திக்க முடியும் என்றானது. ஆனால், இப்போது யாரையுமே அவர் தனது வீட்டில் சந்திப்பதில்லை. தனது வீட்டில் நடத்தப்படும் சுயமரியாதை திருமணங்களையும் நிறுத்திவிட்டார். குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே ஆலோசனை நடத்துகிறார். தேவைப்பட்டால் சீனியர் மாஜிக்கள் வேலு, துரைமுருகனை மட்டும் வீட்டுக்கு அழைக்கிறார் என முடித்தார்.
இதுகுறித்து மாஜி அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் கேட்டபோது. தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டன்கூட எதற்கும் சளைப்பதில்லை. அப்படியென்றால் எங்கள் தலைமை எவ்வளவு வலிமையானது என்பதை புரிந்துகொள்ளுங்கள். தலைவர் ஸ்டாலின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் முப்பெரும் விழா தள்ளிப்போயிருக்கிறது. அவ்வளவுதான். இதற்கு அவர் மனதளவில் உடைந்துவிட்டார் என அரசியல் முலாம் பூசுவது ஏற்புடையது அல்ல என்றார் ஆவேசமாக
நாளை கிழக்கு சிவக்கும்!