முன்னாள் மத்திய அமைச்சர் மகளும், பாராமதி தொகுதி எம்.பி.யுமான சுப்ரியா சுலே புனேயில் இருந்து மும்பைக்கு காரில் வந்து கொண்டிருந்தார்.
புனே-மும்பை நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது அதே வழித்தடத்தில் வந்த மற்றொரு கார் சுப்ரியா சென்ற காரை வேகமாக உரசிச்சென்றது. இதனால் சுப்ரியாவின் கார் நிலைதடுமாறியது.
அதிர்ஷ்டவசமாக இதில் சுப்ரியா சுலே காயம் இன்றி தப்பினார். அவர் சீட் பெல்ட் அணிந்து இருந்ததால் தன்னால் இந்த விபத்தில் காயம் இன்றி தப்பிக்க முடிந்தது என்று தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சுப்ரியா சுலே இது குறித்து வெளியிட்டுள்ள தகவலில், ”நான் புனேவிலிருந்து மும்பைக்கு காரில் பயணித்துக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென வந்த ஒரு கார் என் காரின் மீது மோதியது.
தயவுசெய்து அனைவரும் சீட் பெல்ட் அணிந்து பயணம் செய்யுங்கள். பயணம் செய்யும் அனைவரும் மிகுந்த கவனத்துடன் இருங்கள்.

இது நீங்கள் எப்படி வாகனம் ஓட்டுகிறீர்கள் என்பதைப் பற்றியது அல்ல. எதிரே வரும் ஒரு ஓட்டுநரின் கவனக்குறைவால் கூட விபத்து ஏற்படலாம். நல்லவேளையாக, நான் சீட்பெல்ட் அணிந்திருந்தேன். நாங்கள் அனைவரும் முழுமையாகப் காயம் இன்றி தப்பித்தோம்.
ஆனால், அந்த கார் பக்கவாட்டிலிருந்து வந்து என் காரின் மீது மோதிய அந்த ஒரு நிமிடம் மட்டும் எனக்குச் சற்று அச்சமாக இருந்தது. சாலைப் பாதுகாப்பு மிகவும் முக்கியம்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
தனது கார் மீது மோதிய கார் நம்பரையும் அதில் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் விரைந்து செயல்பட்டு விபத்தை ஏற்படுத்திய காரை மடக்கினர்.
அதில் இருந்த டிரைவர் கைது செய்யப்பட்டார். காரில் பயணம் செய்தவர்கள் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சுற்றுலா சென்றுவிட்டு வந்து கொண்டிருந்தனர்.