அயலக மாணவர் பாரதிதாசனுக்குத் தேவையான அனைத்து கல்வி உதவித்தொகைகளும் தமிழ்நாடு அரசால் உடனடியாக வழங்கப்படும் என்று சமூக நீதித் துறை அமைச்சர் வன்னியரசு உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தம்பி பாரதிதாசனின் உயர்கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அரசு உறுதுணையாக இருக்கும். அவருகான கல்விக்கட்டணம் ரூ.6 லட்சமும், வாழ்வாதாரச் செலவுக்கான (Living Expenses) ரூ.6 லட்சமும் ஏற்கனவே அனுப்பப்பட்டுவிட்டது. பிஹெச்டி (PhD) படிப்பிற்கான ஆய்வுக் கருவிகள் மற்றும் மெட்டீரியல்ஸ் வாங்குவதற்கானத் தொகை மட்டுமே நிலுவையில் உள்ளது. அதுவும் ஓரிரு நாட்களில் அவரது கணக்கில் சென்று சேரும்.
அண்ணல் அம்பேத்கர் அயலக உதவித்தொகை திட்டத்தின் கீழ், கடந்த தி.மு.க ஆட்சியில் 609 பேர் விண்ணப்பித்து, 601 பேர் தகுதி பெற்றபோதிலும், 181 மாணவர்களுக்கு மட்டுமே ரூ.84.89 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், நடப்பு 2026-27-ம் கல்வியாண்டில் 437 பேர் விண்ணப்பித்த நிலையில், தகுதி பெற்ற 365 மாணவர்களுக்கு ரூ.131 கோடி அளவிற்குத் கூடுதல் நிதியை தற்போதைய அரசு ஒதுக்கியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த எஸ்சி/எஸ்டி (SC/ST) மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை தற்போது பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.