மெக்சிகோவை மடக்க ‘வயகரா’ மாத்திரையோடு கிளம்பும் இங்கிலாந்து டீம்.. உலகக்கோப்பையில் என்ன நடக்குது? | FIFA World Cup: Why England Players Are Allowed to Take Viagra Before Mexico Match in the FIFA World Cup knock out

Spread the love

Sports

oi-Yogeshwaran Moorthi

மெக்சிகோ: மெக்சிகோ அணிக்கு எதிரான நாக் அவுட் போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்கள் போட்டிக்கு முன்பாக “வயகரா” மாத்திரைகளைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வயகரா மாத்திரையை இங்கிலாந்து வீரர்கள் பயன்படுத்துவது ஏன் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

ஃபிஃபா உலகக்கோப்பை தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்து மற்றும் மெக்சிகோ அணிகள் மோதவுள்ளன. மெக்சிகோ சிட்டியில் உள்ள புகழ்பெற்ற எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது. இதற்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த மைதானத்தில் நடந்துள்ள 89 போட்டிகளில் 2ல் மட்டுமே மெக்சிகோ அணி தோல்வி அடைந்துள்ளது.

FIFA World Cup

இதனால் இங்கிலாந்து அணி வீரர்கள் யுக்தி ரீதியாக மட்டுமல்லாமல் பல்வேறு வழிகளிலும் வெற்றிக்கான வழிகளை ஆராய்ந்து வருகின்றனர். அப்படியொரு வழி தான் வயகரா மாத்திரையை போட்டிக்கு முன்பாக பயன்படுத்தப் போவது. வயகரா மாத்திரை பொதுவாக வேறு விஷயத்திற்காக பயன்படுத்துவதாகும். அதனை எதற்காக நாக் அவுட் போட்டிக்கு முன் பயன்படுத்தப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

விளையாட்டு வீரர்கள் வயகரா மாத்திரையை பயன்படுத்துவதற்குப் பின்னால் ஒரு முக்கிய அறிவியல் காரணம் உள்ளது. போட்டி நடைபெற இருக்கும் எஸ்டாடியோ அஸ்டெகா மைதானம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 7,350 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இவ்வளவு அதிக உயரத்தில் காற்றில் ஆக்சிஜன் அளவு மிகவும் குறைவாக இருக்கும்.

இதனால் சமவெளிகளில் விளையாடிப் பழகிய ஐரோப்பிய வீரர்களுக்கு மிக விரைவில் மூச்சுத்திணறல், தலைச்சுற்றல் மற்றும் கடுமையான சோர்வு ஏற்படும். மருத்துவ ஆய்வுகளின்படி, வியாக்ராவில் உள்ள ‘சில்டெனாபில்’ (Sildenafil) என்ற வேதிப்பொருள் நுரையீரலில் உள்ள இரத்த நாளங்களை விரிவடையச் செய்கிறது. இதன் மூலம் உடல் முழுவதும் ஆக்சிஜன் சீராக செல்லவும், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.

இதனால் வீரர்கள் சோர்வடையாமல் நீண்ட நேரம் விளையாட முடியும். உலக ஊக்கமருந்து தடுப்பு முகமையின் தடை செய்யப்பட்ட மருந்துகளின் பட்டியலில் வயகரா இடம்பெறவில்லை. எனவே, இதனைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது அல்ல. முன்பு 2019ல் அர்ஜென்டினாவின் உள்நாட்டு கால்பந்து கிளப் ஒன்று, ஈக்வடார் தலைநகரில் உள்ள உயரமான மைதானத்தில் விளையாடிய போது இதே உத்தியைப் பயன்படுத்தியது.

இருப்பினும், இங்கிலாந்து அணி நிர்வாகம் இதனை ஒரு விருப்பத் தேர்வாக மட்டுமே வீரர்களுக்கு வழங்கியுள்ளது. வீரர்கள் இதனை அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்துவார்களா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. உலகக்கோப்பை கால்பந்து தொடரில் எந்தவொரு தவறும் நடந்துவிடக் கூடாது என்பதில் இங்கிலாந்து வீரர்கள் தீவிரமாக இருப்பது இதன் மூலமாக புரிந்து கொள்ள முடிகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *