International
oi-Velmurugan P
நியூயார்க்: இந்தியாவில் வசிக்கும் பலருக்கும் கூகுள், பேஸ்புக் நிறுவனங்களில் பணியாற்றுவது என்பது வாழ்நாள் கனவு. கோடிகளில் சம்பள, உயர்தரமான வாழ்க்கை, அமெரிக்காவில் செட்டில் ஆகிவிடலாம் என்பதுதான் காரணம். அப்படி செட்டில் ஆன இந்தியப் பெண் ஒருவர் தனது அம்மாவை அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள மெட்டா தலைமையகத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அவர்கள் இருவருக்கும் மிகச் சிறப்புமிக்க நினைவாக அந்த பயணம் மாறி உள்ளது. இந்த பயணம், தன் மகள் பணிபுரியும் இடத்தை நேரில் பார்க்க வாழ்நாள் வாய்ப்பாக அமைந்துள்ளது. அவர்களின் வீடியோ சமூக ஊடகங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இந்தியப் பெண்ணான ஷீல் சங்கவி , தனது தாய் உடன் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள மெட்டா தலைமையகத்திற்கு வந்திருந்ததை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவின் தொடக்கத்தில், தன் அம்மாவை அன்றைய தினம் கலிஃபோர்னியாவில் உள்ள மெட்டா தலைமையகத்திற்கு அழைத்துச் செல்வதாக சங்கவி கூறுவதாக ஆரம்பிக்கிறது.

இந்த வீடியோவில் தாய்-மகள் இருவரும் மெட்டா தலைமையகத்தை ஒன்றாகச் சுற்றிப் பார்ப்பது தெரிகிறது.. சங்கவியின் தாய் முதலில் வளாகத்தில் காலை உணவை அருந்துவதையும், பின்னர் தனது மகளுடன் வளாகத்தைச் சுற்றி நடந்து செல்வதையும் காண முடிகிறது.
மெட்டா அலுவலக வளாகத்தின் பல்வேறு பகுதிகளை இருவரும் ஆராயும்போது எடுக்கப்பட்ட இயல்பான தருணங்களை அந்த வீடியோ பதிவு செய்துள்ளது. பின்னர் இருவரும் ஒன்றாக மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, அலுவலகத்திற்குள் செல்கின்றனர். அங்கு சங்கவியின் தாய் தனது மகளின் பணிச்சூழலை நேரில் பார்த்து மகிழ்கிறார்.
பெற்றோருடன் தனது தொழில்முறை சாதனையைப் பகிர்ந்து கொள்வதில் உள்ள எளிய மகிழ்ச்சியையும், தனது வாழ்க்கையோடு தொடர்புடைய ஒரு இடத்தை அவர்களுக்குக் காட்டுவதில் ஏற்படும் பெருமையையும் இந்த நிகழ்வு அற்புதமாக காட்டுகிறது. அந்த வீடியோவைப் பகிர்ந்த சங்கவி, இந்த வருகைக்குப் பின்னால் உள்ள உணர்ச்சி பொங்கல் ஒரு கேப்சன் போட்டுள்ளார். “அவரைப் பெருமைப்படுத்துவது மட்டுமே என்றென்றும் எனது மிகப்பெரிய பெருமிதம் ” என்று அவர் எழுதியுள்ளார். அதாவது என் அம்மாவை பெருமைப்படுத்துதில் தான் எனக்கு பெருமிதம் என்பதாக கூறியுள்ளார்.
இந்தப் பதிவு சமூக வலைத்தளப் பயனர்களிடமிருந்து பலர் பாசிட்டிவ்வான பதில்களை பெற்றுள்ளது. தாய் மற்றும் மகளுக்கு இடையிலான இந்த நெகிழ்ச்சியான தருணத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஒரு நெட்டிசன், “இது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது ” என்று கருத்து தெரிவித்துள்ளார். இன்னொரு நெட்டிசன் “இது மிகவும் அழகாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். “மிகவும் பெருமைக்குரிய தருணம்” என்று மூன்றாவது நெட்டிசன் பதிவிட்டுள்ளார்.

