
மாநாட்டில் பேசிய கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், மேகதாதுவில் அணை கட்டி நீரை சேமிப்பதன் மூலம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களும் பயனடையும் என்று தெரிவித்தார். மேகதாது அணை கட்டப்படாததால் காவிரி உபரிநீர் கடலில் கலந்து வீணாவதாகவும், அந்த நீரை சேமித்து வைத்தால் வறட்சி உள்ளிட்ட நெருக்கடியான காலங்களில் பயன்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
மேலும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினைகள் மோதலாக இல்லாமல் ஒத்துழைப்புடன் அணுகப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், “தண்ணீர் நம்மை ஒன்று சேர்க்க வேண்டும்; பிரித்து விடக்கூடாது” என்றார். மாநிலங்களுக்கு நியாயமான வரிப்பங்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் கர்நாடகா சார்பில் முன்வைத்தார்.
தமிழ்நாடு தொடர்ந்து எதிர்த்து வரும் மேகதாது விவகாரத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பங்கேற்றிருந்த மாநாட்டிலேயே கர்நாடக தரப்பு முன்வைத்திருப்பது அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக, மேகதாது அணை கட்டுவதற்கு தமிழகத்தின் எதிர்ப்பு தொடரும் நிலையில், டி.கே.சிவக்குமாரின் இந்த கருத்துக்கு முதல்வர் விஜய் தரப்பில் இருந்து உடனடியாக எந்த எதிர்வினையும் வெளியாகவில்லை.
இதனால், தமிழகத்தின் காவிரி உரிமை விவகாரத்தில் விஜய் அரசின் நிலைப்பாடு என்ன? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. தென் மாநிலங்களின் ஒருங்கிணைப்பு குறித்து பேசப்பட்ட மாநாட்டில், தமிழ்நாட்டுக்கு மிக முக்கியமான காவிரி விவகாரம் மீண்டும் முன்னிலைக்கு வந்துள்ளது.