மேகதாது: உச்ச நீதிமன்றம் அதிரடி; தமிழ்நாடு அரசுக்குப் பின்னடைவு!

Spread the love

தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்னையான காவிரி நீர் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் இருந்து தமிழக அரசுக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்கு எதிராகத் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவை, உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

“கடந்த 2025 நவம்பரில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்வதற்கு எந்தவிதமான புதிய முகாந்திரமும் இல்லை” என்று நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டது ஏன்? உச்ச நீதிமன்ற அறையில் நடந்த விவாதங்கள் என்ன? முழுப் பின்னணியையும் இப்போது விரிவாகப் பார்க்கலாம்.

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்குச் சற்று மேலே, காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் சுமார் 9,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அணை அமைக்கும் முயற்சியைக் கர்நாடக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதற்காக DPR எனப்படும் திட்ட வரைவு அறிக்கையைத் தயாரித்து, மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காகக் கர்நாடகா சமர்ப்பித்திருந்தது. இதற்கு எக்காரணம் கொண்டும் மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தித் தமிழக அரசும், அதற்கு ஆதரவாகப் புதுச்சேரி மற்றும் கேரள மாநில அரசுகளும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தன. மறுபுறம், அணை கட்ட அனுமதி கோரிக்கையோடு கர்நாடகாவும் களம் இறங்கியது. இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு, கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் 13-ஆம் தேதி ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியது. அதில், `மேகதாது திட்ட வரைவு அறிக்கையின் மீது மத்திய அரசு இன்னும் இறுதி முடிவு எடுக்காததால், தமிழக அரசு இப்பொழுதே நீதிமன்றத்தை நாடியிருக்கத் தேவையில்லை. ஏற்கனவே காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு  ஆகியவை அமைக்கப்பட்டுள்ளதால், இந்த இரு அமைப்புகளின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே மத்திய நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும், தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது” எனக் கூறி தமிழக அரசின் மனுவை அப்போது தள்ளுபடி செய்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *