மேட்டூர் அணை: பிரமாண்டத்தின் சிகரம்; திறப்பு விழா கண்ட அந்த வரலாற்று நாள் நிகழ்வுகள்!| அணை ஓசை 46 | history anai osai mettur dam construction series 46

Spread the love

மாண்புமிகு கவர்னர் கோஷன், “இங்கிலாந்து பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எனக்கு அனுபவம் இருந்தாலும் இங்கே இது எனது முதல் உரை” என தனது பேச்சைத் துவக்கினார்.

“தற்போது இந்தியாவில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. பஞ்சம், வெள்ளப்பெருக்கு, புயல் மற்றும் சூறாவளி, தொற்று மற்றும் கொள்ளை நோய்கள் பரவல் போன்றவை உள்ளன. அரசு இதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. நீர் பாசன வசதிக்காக சாலைகள், கால்வாய்கள் மற்றும் பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கெடுவாய்ப்பாக பெருவெள்ளம் பலருடைய வேலை வாய்ப்பை பறித்துள்ளது.

இதற்கான நிவாரணத்துக்கு நிதி திரட்டப்படுகிறது. காவிரியில் மேட்டூர் அணை திட்டம், முதல் கட்டமாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் நோக்கம் பாசன தேவைகளை நன்கு பாதுகாத்தல், தஞ்சாவூர் பகுதி பாசன தேவைகளை அதிகப்படுத்துதல் என்பவையே! மைசூர் – மெட்ராஸ் அரசுகளுக்கிடையே காவிரி ஒப்பந்தம் ஏற்பட்டது பிரிட்டிஷ் அரசுக்கு மிகவும் திருப்தியாக உள்ளது. இரண்டு அரசுகளும் தங்கள் நிலைகளில் இருந்து இறங்கி வந்தது மக்களுக்கு பயனளிக்கும். இது ஒரு நற்செய்தி” என்ற இவரது உரையின் மூலம் மேட்டூர் அணை திட்டத்தில் ஆரம்பகால நோக்கம் தெளிவாகிறது.

04.03.1925 தேதியிட்ட செய்தி

ஓமலூர் தாலுகா விவசாயிகளின் கோரிக்கை:

காவிரி தங்கள் தாலுகாவில் ஓடுவதால் நீர்ப்பாசனம் செய்ய தங்கள் தாலுகா நிலங்களுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை மனு அளித்தனர். மேலும், மேட்டூர் அணையும் இந்தத் தாலுகாவில் அமைந்துள்ளது எனவும் பலமுறை கோரிக்கையும், தொப்பையாற்றில் அணை கட்ட கோரிக்கையும் வைத்தனர்.

காவிரி மேட்டூர் திட்டத்தில் தங்கள் நிலங்களுக்கு முன்னுரிமை அளிக்க சில காரணங்களையும் அவர்களது மனுவில் பட்டியலிட்டுள்ளனர். ஓமலூரில் இருந்து 25 மைலில் மேட்டூர் அணை கட்டப்படுகிறது. தொப்பையாறு பல இடங்களில் காவிரியுடன் கலக்கிறது. மேட்டூரில் இருந்து ஓமலூர் உயரம் குறைவான (M.S.L) இடத்திலேயே உள்ளது. பாசனத்துக்காக கால்வாய் வெட்டும் செலவை விட வருமானம் அதிகமாக வரும் என்றெல்லாம் காரணங்களை எடுத்துக் கூறியும் அரசு செவி சாய்க்கவில்லை.

15.01.1931ல் வெளியான செய்தி

காவிரி மேட்டூர் திட்ட சிறப்பு அதிகாரியை 20 முக்கியமான டெல்டா பகுதி மிராசுதார்கள் சந்தித்தனர். நெல் மூட்டைகளை, வேறு இடங்களுக்கு அனுப்ப போக்குவரத்தில் மிகுந்த சிரமங்கள் உள்ளதாகவும், மழைப் பொழிவை மட்டுமே நம்பி உள்ள நிலங்களை (புன்செய் நிலம்) நன்செய் நிலங்களாக மாற்றும் அரசின் யோசனையை செயல்படுத்த விவசாயிகளுக்கு மிகுந்த செலவாகும் என்றும் எதிர்ப்பு தெரிவித்தனர். நெல், கரும்பு மற்றும் வெற்றிலை பயிர்கள் இதில் அடங்கும். மண் குறித்த ஆராய்ச்சி தேவை என்றும் விண்ணப்பம் வைத்தனர். ஆனால், சிறப்பு அதிகாரி வரி விகிதம் மிகவும் குறைவு தான் என்றும் ஒப்பந்தப்படி கால்வாய் அமைக்காவிட்டால் எதிர்வரும் காலங்களில் நிறைய தொகை செலவழித்தாலும் பாசன வசதி பெற முடியாது என்றும் எச்சரித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *