மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க 190க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பா.ஜ.க பெற்றுள்ளது. இதன் மூலம் 15 ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு பா.ஜ.க முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.
இத்தேர்தல் முடிவுகள் குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் சுவந்து அதிகாரி கூறுகையில், “‘மக்கள் தவறான ஆட்சிக்கு எதிராக வாக்களித்துள்ளனர். இந்துக்கள் மற்றும் பழங்குடியின மக்கள் அனைவரும் பா.ஜ.கவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
பா.ஜ.க நிறுவனர் ஷியாம் பிரசாத் முகர்ஜி காலத்தில் இருந்தே மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்பது பா.ஜ.கவின் கனவாக இருந்தது. ஆனால் அது முடியாமல் இருந்தது.
ஆனால் இப்போது அந்தக் கனவு நனவாகி இருக்கிறது. நாட்டின் கலாசார தலைநகரமாக மேற்கு வங்கம் இருக்கிறது. தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகள்தான் ஆட்சி மாற்றத்திற்குக் காரணம் ஆகும். பிரசாரத்தை முன்னெடுத்துச் சென்று கடுமையாக உழைத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
பத்திரிகையாளர்கள், “நீங்கள் அடுத்த முதல்வரா?” என்று கேட்டதற்கு அதனை நிராகரித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் தேர்தலைச் சந்தித்தோம். பா.ஜ.கவின் கூட்டுத்தலைமை இது குறித்து முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.
பெண்களின் வாக்களிப்பு முறைகள் குறித்த கேள்விக்கு, அந்த வகையில் ஆண் மற்றும் பெண் என்ற அடிப்படையில் வாக்குகள் பிரிக்கப்படவில்லை என்றும், இந்து பெண்கள் பாஜகவுக்கு வாக்களித்தனர் என்றும் தெரிவித்தார்.
2026ம் ஆண்டு பா.ஜ.க நிறுவனர் ஷியாம் பிரசாத் முகர்ஜியின் 125வது பிறந்தநாள் ஆண்டாகும். அந்த முக்கியமான ஆண்டில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற அடிப்படையில் நீண்ட காலமாகத் திட்டமிட்டு இந்த வெற்றியை பா.ஜ.க பெற்றுள்ளது.