பொதுவாக மனிதர்களின் நடமாட்டம் அல்லது தொடுதல் அதிகம் இருந்தால் தாய் யானைகள் மீட்கப்பட்ட குட்டிகளை மீண்டும் தங்களின் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ள தயக்கம் காட்டும் என்பதால், வனத்துறையினர் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட்டுள்ளனர்.
பிறந்த சில தினங்களில் தாயைப் பிரிந்த அந்தக் குட்டி யானை தொடர்ந்து பிளிறிக் கொண்டே இருந்ததால், வனத்துறையினர் உள்ளூர் மக்களின் உதவியுடன் ஆற்றின் தீவுப் பகுதியில் தாய் யானையைத் தேடியுள்ளனர். சுமார் இரண்டு மணி நேர தீவிரத் தேடலுக்குப் பிறகு ஆற்றங்கரை பகுதியில் குட்டியைத் தேடித் தவித்த தாய் யானையைக் கண்டறிந்துள்ளனர்.
பாதுகாப்பான தூரத்தில் குட்டி யானையை அவர்கள் கொண்டு விட்டதும் ஓடிவந்த தாய் யானை பாசத்துடன் தன் குட்டியை ஏற்றுக்கொண்டு உடனடியாக பால் புகட்டத் தொடங்கியிருக்கிறது. கிட்டத்தட்ட மரணத்தின் நுழைவு வாயில் இருந்த யானை குட்டியை மீட்ட மீனவர்கள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து பாராட்டைப் பெற்று வருகின்றனர்.