மேற்கு வங்க இடைத்தேர்தல்.. அடுத்தடுத்து ட்விஸ்ட்.. அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்! – Kumudam

Spread the love

மேற்கு வங்கத்தின் நந்திகிராம் இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதானுக்கு முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்த சில மணி நேரங்களிலேயே, பழைய வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளார். இது அம்மாநில அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தரப்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட சஞ்சிதா பிரதான் டே, தற்போதைய முதலமைச்சர் சுவேந்து அதிகாரியைச் சந்தித்த பிறகு தனது வேட்புமனுவைத் திரும்பப் பெற்றார். இதனையடுத்து, ‘இந்தியா’ கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதானுக்குத் தங்கள் பிரிவு ஆதரவு அளிக்கும் என மம்தா பானர்ஜி இன்று (செப்.18) அறிவித்தார்.

இருப்பினும், தங்களது வேட்பாளர் வாபஸ் பெற்றதாலேயே மம்தா ஆதரவு அளிப்பதாகவும், தாங்கள் அவரிடம் ஆதரவு கேட்கவில்லை என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜியின் இந்த ஆதரவு அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, கடந்த 2007-ஆம் ஆண்டு நந்திகிராமில் நடைபெற்ற நில கையகப்படுத்தலுக்கு எதிரான போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட பழைய கொலை வழக்கில் காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதானை காவல்துறை கைது செய்தது.

மம்தா ஆதரவு தெரிவித்த உடனேயே நடைபெற்ற இந்த அதிரடி கைதைச் சுட்டிக்காட்டிப் பேசிய திரிணாமுல் தலைவர் குணால் கோஷ், இந்த நடவடிக்கை பாஜக அரசின் அச்சத்தையும் நம்பிக்கை இன்மையையுமே காட்டுவதாகக் விமர்சித்துள்ளார்.

அக்டோபர் 6-ஆம் தேதி நந்திகிராம் மற்றும் ரேஜிநகர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உள்கட்சி மோதலால் திரிணாமுல் காங்கிரஸின் ‘இரட்டைப் பூக்கள்’ சின்னத்தையும் கட்சியின் பெயரையும் தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது. இதனையடுத்து மம்தா பிரிவுக்கு ‘மம்தா அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்’ என்ற பெயரும் ‘கால்பந்து வீரர்’ சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. அருப் ராய் தலைமையிலான போட்டிப் பிரிவுக்கு ‘டெமாக்ரடிக் திரிணாமுல் காங்கிரஸ்’ என்ற பெயரும் ‘உறை’ சின்னமும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *